தூத்துக்குடி கடல் பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு ரோந்து கப்பல் மூலம் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் கண்காணிப்பு.
இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையில் நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் தொடங்கி அத்தியாவசிய பொருட்கள் வரை அனைத்திற்கும் பெரும் தட்டுப்பாடு எழுந்துள்ளது. அதை தொடர்ந்து மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வரும் நிலையில், ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் வன்முறை வெடித்தது. அதை தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.
கடந்த சில தினங்கள் முன்னதாக இலங்கை சிறைக்கைதிகள் சென்ற வாகனத்தை போராட்டக்காரர்கள் தாக்கினர். இதில் வாகனத்திலிருந்து தப்பி சென்ற 50க்கும் மேற்பட்ட சிறைக்கைதிகளை இலங்கை போலீஸார் தேடி வருகின்றனர். அந்த சிறைக்கைதிகள் படகுகள் மூலமாக தப்பி தமிழ்நாட்டிற்குள் நுழைய முயற்சிக்கலாம் என்பதால் வங்க கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படையினர், தமிழ்நாடு போலீஸார் இணைந்து கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் தூத்துக்குடி கடல் பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு ரோந்து கப்பல் மூலம் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் ஆய்வாளர் சைரஸ் தலைமையில் தீவிர கண்காணிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இலங்கையில் இருந்து சமூக விரோதிகள் தமிழகத்துக்குள் கடல் வழியாக ஊடுருவுவதை தடுக்க இந்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.