Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாளை கூடும் அதிமுக பொதுக்குழு கூட்டம் : சசிகலா திட்டம் என்ன?

Advertiesment
நாளை  கூடும் அதிமுக பொதுக்குழு கூட்டம் : சசிகலா திட்டம் என்ன?
, புதன், 28 டிசம்பர் 2016 (12:52 IST)
அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் 29ம் தேதி (நாளை) வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.


 

 
அதிமுகவின் பொதுச்செயலாளர் நாளை தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். அதற்கு கட்சியின் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி அதற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெறவேண்டும். அதற்காக செயற்குழு உறுப்பினர்கள் 280 பேர்களும், 50 மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 2770 பேர் அந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
 
ஜெயலலிதா இருந்தவரை அவர்தான் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர். அவரை எதிர்த்து யாரும், அந்த பதவிக்கு போட்டியிட மாட்டார்கள். மாறாக அவர் பெயரிலேயே நிர்வாகிகள் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள்.
 
தற்போது அவர் மறைந்து விட்ட நிலையில், ஜெ.வின் நீண்ட நாள் தோழியான சசிகலா நடராஜனின் பெயர் அந்த பதவிக்கு முன்னிறுத்தப்பட்டு வருகிறார். அவர்தான் அடுத்த பொதுச்செயலாளர், அவர்தான் அடுத்த அதிமுக தலைமை என அதிமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 
பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள், தினந்தோறும் போயஸ் காரடன் சென்று, கட்சிக்கு தலைமையேற்க வரவேண்டும் என சசிகலாவை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 
ஒருபக்கம் கட்சியில் ஒரு சில மாவட்ட நிர்வாகிகள் பக்கம் அவருக்கு எதிர்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது. சசிகலாவின் தலைமையை விரும்பாத சிலர் ஜெ.வின் அண்ணன் மகளான தீபாவை முன்னிறுத்தி போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் ஒட்டி வருகின்றனர். 

webdunia

 

 
அவர்கள் அனைவரையும் சரி கட்டும் வேளையிலும், சசிகலாவை நாளை பொதுச்செயலாளர் பதவியில் அமர வைக்கவும் முக்கிய அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் களத்தில் இறங்கி வேலை செய்து வருகின்றனர். நாளை நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா பொதுச்செயலாளராக பதவியேற்பார், அதன்பின் ஜனவரி 15ம் தேதிக்கு பின் அவர் முதல் அமைச்சராக பதவியேற்பார் என அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது. 
 
ஆனால், முதல் அமைச்சர் பதவியை ஓ.பன்னீர் செல்வம் விட்டுக் கொடுக்கும் மனநிலையில் இல்லை எனவும், அதேபோல், சசிகலாவை தமிழக முதலமைச்சர் பதவியில் அமருவதை மத்திய அரசும் விரும்பவில்லை எனவும் தெரிகிறது. முதலமைச்சர் என்கிற முறையில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு மட்டுமே எங்கள் ஆதரவு என மத்திய அமைச்சர் வெங்கயநாயுடு சமீபத்தில் பகீரங்கமாகவே பேட்டியளித்தார்.
 
மேலும், 2011.ல் ஜெ.வால் போயஸ் கார்டனிலிருந்து வெளியேற்றப்பட்ட போது, நான் எந்த பதவிக்கு வர மாட்டேன். அரசியலில் ஈடுபட மாட்டேன் என சசிகலா அறிக்கை வெளியிட்டு மீண்டும் ஜெ.வுடன் இணைந்தார். தற்போது அதுதான் சசிகலாவிற்கு தடையாக இருப்பதாகவும், இதனால் என்ன செய்வது என அவர் ஆலோசனையில் இருப்பதாகவும் தெரிகிறது.

webdunia

 
முடிவில், பொதுக்குழு நடைபெறும். ஆனால் சசிகலா கலந்து கொள்ள மாட்டார். அவரே பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார். அதற்கான ஒப்புதல் போயஸ் கார்டன் கொண்டு செல்லப்பட்டு, சசிகலா அதில் கையொப்பம் இடுவார். அதன் பின் அதிமுக தலைமைச் செயலகம் சென்று எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து பொதுச் செயலாளர் பதவியை ஏற்றுக் கொள்வார் என செய்திகள் வெளியானது. ஆனால், ஒரு சில மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் சசிகலாவிற்கு எதிராக நிற்பார்கள் என்பதால், அவர் பொதுச்செயலாளர் பதவியை ஏற்க தயங்குவதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்நிலையில், பண்ருட்டி ராமச்சந்திரன் உட்பட கட்சியில் சில முக்கிய மூத்த அமைச்சர்கள் போயஸ் கார்டன் சென்று சசிகலாவை சந்தித்து பேசியுள்ளனர்.  சொத்துகுவிப்பு வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. மத்திய அரசிற்கும் விருப்பம் இல்லை. எனவே இப்போது நீங்கள் பொதுச்செயலாளர் பதவியை ஏற்றுக் கொள்ள வேண்டாம்.  அதற்கான நேரம் வரும்போது ஏற்கலாம் என அறிவுரை கூறியுள்ளார்களாம். 
 
எனவே தற்காலிகமாக ஒருவரை பொதுச்செயலராக நியமித்து விடுவோம் அல்லது நீங்கள்தான் பொதுச் செயலாளர் என ஒரு தீர்மானம் மட்டும் போட்டு விடுவோம் என கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
எனவே சசிகலா என்ன முடிவெடுப்பார்? யார் பொதுச் செயலாளராக யார் அறிவிக்கப்படுவார்? 

எல்லாவற்றுக்கும் பதில் நாளை பொதுக்குழு கூட்டத்தின் முடிவில்...

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுக பொதுக்குழு இப்படித்தான் நடக்கப்போகிறதாம்: யாருக்கு அனுமதி? யாருக்கு அனுமதி இல்லை?