அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக சசிகலா புஷ்பா கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை டெல்லி விமான நிலையத்தில் திருச்சி சிவாவை கன்னத்தில் பளார், பளார் என அறைந்தார் சசிகலா புஷ்பா. பின்னர் தான் திருச்சி சிவாவை அறைந்ததாக தைரியமாக பேட்டியும் கொடுத்தார்.
இதனையடுத்து ஜெயலலிதா தரப்பை சந்தித்து விட்டு, இன்று மாநிலங்களவையில் பேசிய சசிகலா புஷ்பா, திருச்சி சிவாவிடம் மன்னிப்பு கோரினார்.
தொடர்ந்து பேசிய அவர் அதிமுக தலைமை தன்னை ராஜினாமா செய்ய வற்புறுத்தியதாகவும், தன்னை அடித்ததாகவும் கூறி மாநிலங்களவையே அதிர வைத்தார். தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், மாநில அரசால் ஆபத்து உள்ளது எனவும் முழங்கினார்.
இந்த சூழலில் சசிகலா புஷ்பாவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி உத்தரவிட்ட ஜெயலலிதா கட்சியினர் யாரும் அவருடன் தொடர்பில் இருக்க கூடாது என உத்தரவிட்டுள்ளார்.
தொடர் சர்ச்சைகளில் சிக்கி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா, தான் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை எனவும் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா புஷ்பா “ அதிமுகவில் இருந்து என்னை நீக்கிவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இனிமேல், என்னால் சுயமாக பணியாற்ற முடியும். போயாஸ் கார்டனில் ஒரு நாய் போல் நடத்தப்பட்டேன். வீட்டிற்கு செல்ல கூட என்னை அனுமதிக்கவில்லை” என்று கூறியுள்ளார்.