பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா இந்த மாத இறுதியில் விடுதலையாக அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா விரைவில் அதாவது ஆகஸ்ட் 15 ஆம் தேதி விடுதலை அடைவார் என்றும் அவர் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே விடுதலை பெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், விடுதலை ஆகவில்லை.
இந்நிலையில் சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், இந்த மாத (செப்டம்பர்) இறுதியில் சசிகலா விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக கூறியிருப்பது மீண்டும் சசிகலாவின் விடுதலை குறித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறை நன்னடத்தை விதிகளின்படி கடந்த மார்ச் மாதமே சசிகலா விடுதலை பெற தகுதி பெற்று விட்டார் என்றும் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா வெளியே வருவார் என்றும் ராஜா செந்தூர் பாண்டியன் கூறியுள்ளார்.
ஏற்கனவே அதிமுக அமைச்சர்கள் இரண்டு குழுவாகப் பிரிந்து ஒருவருக்கொருவர் கருத்து மோதலில் ஈடுபட்டு இருக்கும் நிலையில் சசிகலா வெளியே வந்தால் அதிமுகவின் நிலை என்ன ஆகும் என்பது கேள்விக்குறியாக இருந்தது.
இதனிடையே சிறுவர்கள் கூறும் கதையாக புலி வருது, புலி வருது என முன்பே ஏமாற்றி பயம் காட்டி கடைசியில் உண்மையில் புலி வரும் போதும் நம்பிக்கையில்லாமல் போவது போல ஆகிவிட்டது சசிகலாவின் விடுதலை.