Publish Date: Mon, 25 Jan 2021 (13:11 IST)
Updated Date: Mon, 25 Jan 2021 (13:13 IST)
விரைவில் விடுதலையாக இருந்த சசிக்கலா தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது விடுதலை குறித்து சிறைத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா நாளை மறுநாள் 27ம் தேதியன்று விடுதலையாக இருந்த நிலையில் திடீர் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அவர் நலமாக உள்ளதாக தெரிவித்துள்ள மருத்துவமனை நிர்வாகம் அவர் ஐசியூவிலிருந்து பொது படுக்கைக்கு மாற்றப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
சிறை காலத்தில் சசிக்கலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அவரது தண்டனை காலம் சில நாட்கள் நீடிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் பேசிக் கொள்ளப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் குறிப்பிட்டப்படியே ஜனவரி 27ல் சசிக்கலா விடுதலையாவார் என்றும், சிறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று நேரடியாக சசிக்கலாவிடம் கையெழுத்து பெறுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.