மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா விவகாரம் நாளுக்கு நாள் விபரீதமாகி வருகின்றன. தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வரும் சசிகலா புஷ்பா மீது தற்போது பண மோசடி புகார் ஒன்று நெல்லை மாநகர காவல் ஆணையரிடம் வழங்கப்பட்டுள்ளது.
நெல்லை சாந்தி நகரை சேர்ந்த ராஜேஷ் என்பவர் மாநகர காவல் ஆணையார் சிவஞானத்திடம் அளித்த புகாரில் கடந்த 2015-ஆம் ஆண்டு சசிகலா புஷ்பா தனக்கு நெடுஞ்சாலைத்துறையில் காண்ட்ராக்ட் பெற்றுத்தருவதாக கூறி ரூ.20 லட்சம் பெற்று ஏமாற்றி விட்டார் என கூறியுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புகார்தாரர் ராஜேஷ், தான் வட்டிக்கு வாங்கி தான் சசிகலா புஷ்பாவிடம் பணம் கொடுத்ததாகவும், அந்த பணத்தை திருப்பி கேட்க போனால் அவர் என்னை மிரட்டுகிறார் என்றார்.
மேலும் பணத்தை கேட்டால் சசிகலா புஷ்பா என்னை தகாத வர்த்தைகளை கூறி திட்டினார் என ராஜேஷ் பரபரப்பு புகாரை கூறியுள்ளார். எனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது, அச்சுறுத்தல் உள்ளது என கூறிய சசிகலா புஷ்பாவே இன்னொருவருக்கு மிரட்டல் விட்டிருக்கும் செய்தி பரபரப்பாக பேசப்படுகிறது.