ஜெ.வின் பணத்தை கொள்ளையடித்த தினகரன்: மதுசூதனன் பரபரப்பு குற்றச்சாட்டு!
ஜெ.வின் பணத்தை கொள்ளையடித்த தினகரன்: மதுசூதனன் பரபரப்பு குற்றச்சாட்டு!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பணத்தை கொள்ளையடித்து தான் ஆர்கே நகர் தேர்தலில் பயன்படுத்தி வருகிறார் டிடிவி தினகரன் என ஓபிஎஸ் அணியின் வேட்பாளர் மதுசூதனன் குற்றம்சாட்டியுள்ளார்.
வரும் 12-ஆம் தேதி ஆர்கே நகரில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் டிடிவி தினகரனுக்கு, மதுசூதனனுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த தேர்தலில் டிடிவி தினகரன் வாக்காளர்களுக்கு வாக்களிக்க பணத்தை வாரியிறைப்பதாக எல்லா கட்சிகளும் குற்றம் சாட்டுகின்றன.
வீடியோ ஆதாரங்களுடன் தினகரன் தரப்பு பணப்பட்டுவாடா செய்ததை தேர்தல் ஆணையத்திடம் புகார்களாக பல கட்சிகள் அளித்து வருகின்றன. இருந்தாலும் தினகரன் தரப்பு பணத்தை அள்ளி வீசி வருவதாகவே கூறப்படுகிறது.
இந்நிலையில் இது குறித்து தனது தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மதுசூதனன் சசிகலா குடும்பத்திற்கு இவ்வளவு சொத்து எங்கிருந்து வந்தது? இவை அனைத்தும் ஜெயலலிதாவை ஏமாற்றி கொள்ளையடித்த பணம். இந்த கொள்ளை ரகசியம் தெரிந்ததால்தான் ஜெயலலிதா சசிகலா கும்பலை வெளியேற்றினார்.
பின்னர் சசிகலா மட்டும் மன்னிப்பு கடிதத்தை கொடுத்து விட்டு திரும்ப வந்தார். இந்தக் குடும்பம் எல்லாவற்றையும் பிளான் பண்ணி செய்துவிட்டது. தினகரன் குடும்பம் செய்தது அனைத்தும் திட்டமிட்ட கொள்ளைதான். அந்த கொள்ளை பணம்தான் ஆர்கே நகர் தேர்தலில் வந்திருக்கிறது என்று குற்றம்சாட்டினார்.