Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சவுக்கு சங்கர் கைது.. பத்திரிக்கை சுதந்திரத்தை காலில் போட்டு மிதிக்கும் திமுக அரசு: சசிகலா கண்டனம்..!

Advertiesment
சவுக்கு சங்கர் கைது.. பத்திரிக்கை சுதந்திரத்தை காலில் போட்டு மிதிக்கும் திமுக அரசு: சசிகலா கண்டனம்..!

Siva

, ஞாயிறு, 5 மே 2024 (16:29 IST)
சவுக்கு சங்கர் அவர்களை திமுக தலைமையிலான அரசு கைது செய்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது என்றும், திமுக தலைமையிலான விளம்பர அரசு பத்திரிக்கை சுதந்திரத்தை காலில் போட்டு மிதித்துள்ளது என்றும் சசிகலா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:

சென்னையைச் சேர்ந்த சவுக்கு என்ற யூடியூப் சேனலின் முதன்மை செயல் அதிகாரி சவுக்கு சங்கர் அவர்களை திமுக தலைமையிலான அரசு கைது செய்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. இதன் மூலம் திமுக தலைமையிலான விளம்பர அரசு பத்திரிக்கை சுதந்திரத்தை காலில் போட்டு மிதித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை, தமிழக காவல்துறை நேற்று கைது செய்து போலீஸ் வேன் மூலம் கோவைக்கு அழைத்துச் சென்ற போது அவர்கள் வந்த வேன் மீது கார் ஒன்று மோதியதில் சவுக்கு சங்கர் மற்றும் இரண்டு காவலர்களுக்கு காயம் ஏற்பட்டதாக செய்திகள் வருகின்றன. இதன் மூலம் பத்திரிக்கை தொழிலில் உள்ளவர்கள், சமூக ஊடகங்களில் இருப்பவர்கள் என அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  

பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் அவர்கள் திமுக தலைமையிலான அரசின் நிர்வாக சீர்கேடுகளையும், பல்வேறு துறைகளில் நடைபெறும் ஊழல்களையும், இந்த அரசாங்கத்தின் தவறுகளையும், அஞ்சாமல் தைரியத்துடனும், துணிச்சலாகவும் தனது கருத்துகளை பேட்டிகள் மூலம் சமூக ஊடகங்களில் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்துள்ளார். இத்தகைய சூழ்நிலையில் திமுக தலைமையிலான அரசு மீது வைக்கப்படும் விமர்சனங்களை பொறுத்துக்கொள்ள முடியாமல் பத்திரிகையாளர் சவுக்கு சங்கரை கைது செய்து இருப்பதன் மூலம் ஒட்டுமொத்த பத்திரிகை உலகத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறது. திமுக தலைமையிலான அரசு இதுபோன்று பத்திரிகையாளர்களை அச்சுறுத்தி தங்கள் தவறுகளை மறைக்க பார்க்கிறது.

பத்திரிகையாளர்களின் விமர்சனங்களை தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் அனைவருக்கும் வேண்டும் என்ற கருத்தை, சமீபத்தில் ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம், தெரிவித்து இருப்பதையும் இந்நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எனவே, திமுக தலைமையிலான அரசு இதுபோன்று பத்திரிக்கையாளர்களை அச்சுறுத்தி, பத்திரிக்கை சுதந்திரத்தை அடியோடு நசுக்கிவிடலாம் என்று தப்பு கணக்கு போடுவதை விட்டுவிட்டு, தங்கள் தவறுகளை திருத்தி கொள்ள வேண்டும். தமிழகத்தில் இந்த கோடை காலத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெயிலின் தாக்கத்தால் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாடு, தொடர் மின்தடை போன்றவற்றை சரி செய்ய தேவையான அடிப்படை வசதிகளை உடனே செய்து தர வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசை கேட்டுக்கொள்கிறேன்.

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருச்செந்தூர் கடலில் சீற்றம்.. பக்தர்கள் குளிக்க தடை.. கோயில் நிர்வாகம் நடவடிக்கை..!