கணவர் நடராஜனின் உடல் நிலையை காரணமாக கூறி சசிலா மீண்டும் பரோல் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக, உடல் நலக்குறைப்பாட்டில் அவதிப்படும் தனது கணவர் நடராஜனை பார்ப்பதற்காக, 15 நாள் பரோல் கேட்டு சசிகலா மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்நிலையில், சசிகலா பரோல் கோரிய மனுவில் தகுந்த ஆதாரங்கள் இல்லை மற்றும் சில தொழில் நுட்ப காரணங்களை காரணம் காட்டி அவரின் பரோல் மனுவை கர்நாடக சிறைத்துறை நிர்வாகம் நேற்று நிராகரித்துவிட்டது. மேலும், கூடுதல் தகவல்களுடன் புதிய பரோல் மனுவை தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.
அதோடு, நடராஜனுக்கு மாற்று உறுப்பு அறுவை சிகிச்சையும் இன்று வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சசிகலா மீண்டும் தனது கணவர் நடராஜனின் உடல் நிலையை காரணம் காட்டி பரோலுக்கு விண்ணப்பித்துள்ளார். கர்நாடக மாநிலம் அக்ரஹார சிறை கண்காணிப்பாளரிடம் அவர் அதற்கான மனுவை இன்று அளித்துள்ளார். இந்த முறை நடராஜன் சிகிச்சை குறித்து அனைத்து ஆதாரங்களையும் அவர் அந்த மனுவுடன் இணைத்துள்ளார் எனக் கூறப்படுகிறது.
இந்த முறை அவருக்கு கண்டிப்பாக பரோல் கிடைக்கும் என நம்பப்படுகிறது. அவர் அப்படி வெளியே வந்தால் அதிமுகவில் சில மாற்றங்கள் ஏற்படும் எனவும், சில அதிமுக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் சசிகலா பக்கம் வருவார்கள் எனவும் அதிமுக வட்டாரத்தில் கூறப்படுவதால், சசிகலாவின் பரோல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.