சசிகலா, இளவரசிக்கு முன்ஜாமின் வழங்கி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்து சிறையில் சொகுசு வசதிகள் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. தனது சொகுசு வசதிக்காக ரூ.2 கோடி லஞ்சம் தந்ததாக புகார் அளிக்கப்பட்டது.
இது குறித்து ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று பெங்களூரு இருபத்தி நான்காவது பெருநகர நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்த விசாரணைக்கு சசிகலா இளவரசி உள்பட 7 பேரும் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து சசிகலா மற்றும் இளவரசி ஆகிய இருவரும் நேற்று பெங்களூர் புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. மேலும் பெங்களூரு சிறை அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு சசிகலா, இளவரசி மனுத் தாக்கல் செய்தனர்.
இதனைத்தொடர்ந்து சிறையில் சொகுசு வசதிகள் செய்து தர லஞ்சம் தந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சசிகலா, இளவரசிக்கு முன்ஜாமின் வழங்கி பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.