Publish Date: Mon, 27 Nov 2017 (16:04 IST)
Updated Date: Mon, 27 Nov 2017 (16:07 IST)
ஆர்.கே.நகரில் இரட்டை இலையை எதிர்த்து போட்டியிட வேண்டாம் என டிடிவி தினகரனை சசிகலா எச்சரிக்கை விடுத்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ஆர்.கே.நகர் தேர்தலில் நான் போட்டியிடுவேன் எனவும், இரட்டை இலையை மீட்கவே, இரட்டை இலையை எதிர்த்து போட்டியிடுகிறேன் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
அந்நிலையில்தான் சமீபத்தில் பெங்களூர் சென்று சசிகலாவை சந்தித்தார் தினகரன். அப்போது ஆர்.கே.நகரில் போட்டியிட வேண்டாம் தினகரனிடம் சசிகலா கூறியதாக செய்தி வெளிவந்துள்ளது.
இரட்டை இலையை எதிர்த்து போட்டியிட்டால் நாம் அதிமுகவிற்கு எதிரானவர்கள் போன்ற தோற்றம் ஏற்படும். மேலும், ஏற்கனவே மத்திய அரசு நம்மை பல வழிகளில் பயமுறுத்தி வருகிறது. தேர்தலில் நின்றால், தற்போது எடப்பாடி அரசும் அந்த வேலையை தொடங்கிவிடும். ஏற்கனவே மிடாஸ் மதுபான ஆலைக்கு செக் வைத்துள்ளனர். எனவே, நாம் எந்த தொழிலும் செய்ய முடியாமல் போகும்.
இரட்டை இலையும் நம் கையை விட்டுப் போய்விட்டது. தற்போது, அதிமுகவை நாம் எதிர்க்க முடியாது. அப்படி செய்தால் நாம் கடைசி நிலைக்கு தள்ளப்படுவோம். 2 சதவீத ஓட்டுகள் மட்டுமே வாங்குவோம். நம்மை திமுகவின் கைக்கூலி எனப் பேசுவார்கள். பொறுமையாக இரு. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு நம் பலத்தை காட்டுவோம். அதிமுகவை கைப்பற்றுவதே நம் நோக்கம்” எனக் கூறினாராம்.
ஆனால், ஆர்.கே.நகரில் போட்டியிட்டு தனது செல்வாக்கை எடப்பாடி தரப்பிற்கு நிரூபிக்க வேண்டும் என திட்டமிட்டுள்ள தினகரன் சசிகலாவின் அறிவுரையை ஏற்கவில்லை எனத் தெரிகிறது. மேலும், ஆர்.கே.நகரில் நான் குறிப்பிட சதவீதம் வாக்குகளை பெறுவேன். அதன் மூலம் நம் பக்கம் அதிமுக வரும். நான் போட்டியிடுவதில் உறுதியாக இருக்கிறேன் எனக் கூறிவிட்டாராம்.
கடந்த முறை ஆர்.கே.நகரில் தினகரன் போட்டியிட்டுதான் பதவி, கட்சி மற்றும் சின்னம் எல்லாமே சசிகலா குடும்பத்தினரை விட்டுப் போனது. இந்த முறையும் தினகரன் பிடிவாதமாக இருப்பதால், மன்னார்குடி வகையறாக்கள் அவர் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.