Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆண்டாள்-வைரமுத்து பிரச்சனை குறித்து சரத்குமார் கூறியது என்ன?

ஆண்டாள்-வைரமுத்து பிரச்சனை குறித்து சரத்குமார் கூறியது என்ன?
, வெள்ளி, 19 ஜனவரி 2018 (00:54 IST)
சமீபத்தில் ராஜபாளையத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் கவியரசு வைரமுத்து, ஆண்டாள் குறித்து கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் கோலிவுட் திரையுலகினர் வைரமுத்துவுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் மாறி மாறி தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


இந்த நிலையில் நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:

வைரமுத்து கூறியது தவறா சரியா என்பதை விட, அவர் வருத்தம் தெரிவித்த பிறகும், அவர்மேல் சுமத்தப்படும் பழிகளும் விமர்சனங்களும் அநாகரீகத்தின் உச்சம்.

அவர் ஒரு ஆராய்ச்சி ஆவணத்தில் மேற்கோள் காட்டப்பட்டதை சுட்டிக்காட்டி பேசியுள்ளார். அந்த கருத்து இந்து மதத்தில் நம்பிக்கை கொண்டவர் பெரும்பான்மை மக்களின் மனதை பாதித்த காரணத்தினால் அவர் உடனடியாக வருத்தம் தெரிவித்தார். அவர் கூறிய விளக்கத்தை முழுமையாக கேட்க தயாராக இல்லாத நிலையில், சூழ்நிலையின் தன்மையை புரிந்துகொண்டு அவர் உடனடியாக வருத்தம் தெரிவித்தது அவரின் பெருந்தன்மையை காட்டுகிறது.

தமிழக மண்ணிற்கு தனது படைப்பினால் இந்திய அளவிலும் உலக அளவிலும் பெருமை சேர்த்த ஒருவரை நா கூசும் வகையில் வார்த்தைகளை உபயோகித்து அவரை கீழ்த்தரமான மனிதராக சித்தரித்து இது வரை அவர் சேர்த்த மரியாதையை மக்களின் அபிமானத்தை கடுமையான வார்த்தைகள் மூலம் சின்னாபின்னமாக்கி அவரை சிறுமை படுத்தியது கண்டிக்க தக்கது.

உலகத்தில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு மதிப்பை பெற்ற கவிஞரை மேலும் மேலும் துன்புறுத்துவது மிகுந்த வேதனை அளிக்கிறது.

நான் ஏற்கனவே பதிவு செய்திருந்த படி ‘இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்நாண நன்னயம் செய்துவிடல்’ என்ற குறளை நமக்கு வழங்கிட்ட வள்ளுவர் வாழ்ந்து பெருமை சேர்த்த தமிழ் மண் இது. தமிழனே தனது குலத்தில் பிரிவினை ஏற்படுத்த பிறரால் நடத்தப்படும் சூழ்ச்சியோ இது என்று தோன்றுகிறது. இதே மண்ணில்தான் காலம் காலமாக "அன்னையும் பிதாவும் முன்னேறி தெய்வம்" என்றும் நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது. பெண்களை தெய்வ அம்சமாக பார்க்க வலியுறுத்துகிறது. ஆனால், வைரமுத்து அவர்களின் தாயை அவரது குடும்பத்தில் இருப்பவரை எல்லாம் தரக்குறைவாக பேசுவது, எந்த விதத்திலும் நியாயம் இல்லை. இது மேலும் தொடர்வது கண்டிக்கத்தக்கது. இது தமிழகத்தில் பல்வேறு பிரிவினைகளை உருவாக்கிவிடும் என்பதை நாம் உணரவேண்டும்.

இவ்வாறு சரத்குமார் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே விமானத்தில் டெல்லியில் இருந்து வந்த இரண்டு தமிழர்களின் உடல்