மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதற்காக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ள நிலையில், நடிகர் சரத்குமாரும் டெல்லி சென்று திரும்பியுள்ளார். இந்த அடுத்தடுத்த பயணங்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
டெல்லி பயணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், ஒரு முக்கியமான கண்டுபிடிப்புக்காகவே தான் டெல்லி சென்றதாக தெரிவித்தார். பா.ஜ.க.வில் இணைந்த பிறகு அமித்ஷாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்ததாகவும், தற்போது அந்த வாய்ப்பு கிடைத்ததால் அதை பயன்படுத்திக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், துணை குடியரசு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததாகவும் கூறினார். தேர்தலில் வெற்றிபெறுவதற்கு முன்பே அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்ததாகவும், இப்போது வெற்றிக்குப்பின் மீண்டும் வாழ்த்து தெரிவித்ததாகவும் சரத்குமார் கூறினார்.
அ.தி.மு.க.வின் செங்கோட்டையன், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் பாஜகவில் சமீபத்தில் இணைந்த நடிகர் சரத்குமார் என அடுத்தடுத்து அரசியல் தலைவர்கள் டெல்லிக்கு சென்று அமித்ஷாவை சந்திப்பது, தமிழக அரசியலில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.