Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இலங்கை கடற்படையினர் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த சரத்குமார்!

இலங்கை கடற்படையினர் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த சரத்குமார்!
, புதன், 22 டிசம்பர் 2021 (12:03 IST)
நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமார் இலங்கைக் கடற்படையினரால் இந்திய தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது குறித்து கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் ‘கடந்த டிசம்பர் 18 மற்றும் 19-ம் தேதிகளில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, 55 தமிழக மீனவர்களை, கச்சத்தீவு அருகேயுள்ள நெடுந்தீவில் இலங்கை கடற்படையினர் சிறைப்படுத்தி, அவர்களது 8 விசைப்படகுகளைக் கைப்பற்றி, ஜனவரி 3-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க வேண்டும் என்ற உத்தரவின்படி, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதாக எழும் பிரச்சினைகளின் தன்மை காலங்காலமாக மாறாமல் நீடிப்பது வேதனையளிக்கிறது. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதால் சிறைப்பிடிக்கப்படுகிறார்கள் என்றால், இந்திய கடலோரக் காவல்படை ஏன் தனது எல்லைக்குட்பட்ட, தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிப் போகும்போது அமைதி காக்கிறது? இந்தியா – இலங்கை நாடுகளுக்கிடையேயான கடல் பகுதியில் இந்திய கடற்படையின் கண்காணிப்பு போதிய அளவில் இருந்து, முழு கவனம் செலுத்தியிருந்தால், இதுபோன்ற இக்கட்டான சூழல் தொடர்ந்திருக்காது.

மத்திய அரசு, உடனடியாக இலங்கை சிறையில் அடைபட்டிருக்கும் தமிழக மீனவர்களை விடுதலை செய்யவும், அவர்களது விசைப்படகுகளை மீட்கவும் இலங்கை அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமிழக அரசு பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்ப வாழ்வாதாரத் தேவைக்கு உதவ வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் இன்னலுக்கு உள்ளாகும் இந்த அவலநிலைக்கு மத்திய – மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பேச்சுவார்த்தை நடத்தி, நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தி இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் படி 20 யுடியூப் சேனல்களை முடக்கிய மத்திய அரசு!