கரூரில் நடைபெறும் மணல் கொள்ளை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுக்கா விட்டால் மக்கள் போராட்டம் கிளர்ச்சியாக எழும் என காவிரி பாதுகாப்பு இயக்கம் எச்சரித்துள்ளது.
கரூர் மாவட்டத்தில், காவிரியாற்று பகுதிகளில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், கரூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் காவிரி ஆறுகளில் முற்றிலுமாக மணல் எடுக்காததினால், மாட்டுவண்டி உரிமையாளர்கள் மற்றும் அது சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு வேலை இல்லாமல் பரிதவித்ததோடு, கட்டட பணிகள் பாதிக்கப்பட்டு, தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டது.
இதனால், மாட்டு வண்டி உரிமையாளர்கள், லாரிகளுக்கு மணல் சப்ளை செய்ய மாட்டோம் என கூறி, மணல் அள்ள மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை அனுமதி கேட்டும் மனு கொடுத்தனர். இதையடுத்து, உள்ளூர் தேவைக்காக மணல் அள்ள, மாவட்ட நிர்வாகம் தரப்பில், மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு வாய்மொழி உத்தரவு மூலம் அனுமதி வழங்கப்பட்டது.
கடந்த இரண்டு மாதங்களாக அதுவும் இரவு நேரத்தில் மட்டுமே, காவிரி மற்றும் அமராவதி ஆற்றில் மாட்டுவண்டியில் மணல் அள்ளி வரும் அவர்கள் மத்தியில், சில மாட்டு வண்டி உரிமையாளர்கள், உள்ளூர் தேவைக்கு மணல் வழங்காமல், லாரிகளுக்கு மணல் சப்ளை செய்ய தொடங்கியுள்ளனர். கரூர் மாவட்டத்தில் இருந்து, வெளி மாவட்டங்களுக்கு இரவு நேரத்தில், நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் மணல் கடத்தப்படுகிறது.
இந்நிலையில் ஆங்காங்கே பெயரளவிற்கு மட்டுமே வருவாய்த்துறை அதிகாரிகள், சோதனை என்கின்ற பெயரில் ஒரு சில லாரிகளை பிடித்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்துகின்றனர். ஆனால் மணல் லாரி டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் யார், யார் என்று தெரிய வராமல், அப்படியே மறைக்கப்படுவதோடு, அந்த மணல் லாரிகளில் மணல் நிரப்ப தேவைப்படும் பொக்லின் இயந்திரம் எங்கே, என்கின்ற விவரத்தையும் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் விதமாக மாவட்ட நிர்வாகமும், வருவாய்த்துறையும், காவல்துறையும் செயல்படுவதாக பொது நல ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நீதிமன்றத்தின் தீர்ப்பையே இழிவு செய்யும் விதமாக மணல் கடத்தலில் தினந்தோறும் ஈடுபடுபவர்களை அரசு கண்டிக்காதது ஏன் என்றும், கரூர் மாவட்ட ஆட்சியர் உடனே இந்த சம்பவத்தினை தடுத்து நிறுத்தா விட்டால் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டம் தொடரும் என்று காவிரி ஆற்றுப்பாதுகாப்பு இயக்கத்தின் நிர்வாகியும் கோரிக்கையோடு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
மேலும், உயர்நீதிமன்றத்தின் இரண்டு மூன்று தீர்ப்புகளுக்கு பிறகு கூட இன்றுவரை மணல் கொள்ளை அதிகரித்து வருவதோடு, மாட்டுவண்டியில் மணல் எடுத்து அந்த மணலை, மணல் லாரிகளில் வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது. ஸ்டாக் பாயிண்ட்களில் உள்ள லாரிகளை பறிமுதல் செய்த நிர்வாகம், பொக்லீன் இயந்திரங்களை பறிமுதல் செய்வதுமில்லை. டிரைவர்களை கைது செய்வதும் இல்லை.
மணல் கொள்ளையின் உச்சத்தில் தமிழகம் உள்ளதாகவும், குறிப்பாக கரூர் மாவட்டத்தில், புகழூர், கடம்பங்குறிச்சி, வாங்கல், லாலாபேட்டை, மாயனூர், புலியூர், கரூர், பசுபதிபாளையம் ஆகிய பல பகுதிகளில் அமராவதி மற்றும் காவிரி ஆறுகளில் தொடர்ந்து மணல் கொள்ளை நடைபெற்று வருவதாகவும் காவிரி ஆற்றுப்பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் விஸ்வநாதன் வேதனையோடு தெரிவித்தார்.
பேட்டி : விஸ்வநாதன் – தலைவர் – காவிரி ஆற்றுப்பாதுகாப்பு இயக்கம்