Publish Date: Wed, 25 Mar 2026 (09:30 IST)
Updated Date: Wed, 25 Mar 2026 (09:32 IST)
நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவுடனான விவாகரத்து விவகாரத்தால் பேசுபொருளாகியுள்ள நிலையில், சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் நடிகை திரிஷாவுடன் இணைந்து பங்கேற்றது பெரும் சர்ச்சையை கிளப்பியது. முன்னதாக, நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி சங்கீதா தாக்கல் செய்த மனுவில், தனது கணவர் வேறொரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகவும், அதனை கைவிட மறுப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இத்தகைய காலகட்டத்தில் விஜய், திரிஷாவுடன் பொது நிகழ்ச்சியில் பங்கேற்றது அவரது கட்சித் தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன், அவரது அரசியல் செல்வாக்கிலும் சறுக்கலை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், நடிகர் மற்றும் இயக்குநர் சமுத்திரக்கனி தனது திரையுலக நண்பர்களுடன் இந்த விவகாரம் குறித்துப் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில், "இது என்ன விளையாட்டா? இவ்வளவு விஷயங்கள் நடக்கும்போது அவங்களை எப்படி வெளியே கூட்டிட்டுப் போகிறீர்கள்? நான்கு சுவற்றுக்குள்ளேயே வைத்திருக்க வேண்டியதுதானே? யாரை பழி வாங்குகிறீர்கள்? எல்லாம் நல்லபடியாகச் சென்று கொண்டிருந்த நிலையில், தற்போது கட்சிக்காரனே இனிமேல் நம்மால் முடியாது என்று சலித்துக்கொள்கிறான்" என சமுத்திரக்கனி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில், இந்த வீடியோ விவகாரம் தொடர்பாக சமீபத்திய பேட்டி ஒன்றில் சமுத்திரக்கனி பேசியிருந்தார். அவர் கூறியதாவது:
வீடியோ எடுக்கப்படுவது எனக்குத் தெரியும். தெரிந்துதான் பேசினேன். அங்கு அந்தத் தம்பி மட்டும்தான் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தான்.எனக்கு மனதில் ஒன்றை வைத்துக்கொண்டு வெளியே வேறு விதமாகப் பேசத் தெரியாது. அந்த வீடியோவை வைத்துக்கொண்டு மானே, தேனே போட்டு நம் தம்பிகள் வேறு சில வேலைகளைப் பார்த்துவிட்டார்கள். அதை நான் குற்றமாக நினைக்கவில்லை. பேசியதற்காக நான் வருத்தப்படவும் இல்லை. அது என் அக்கறை, ஒரு வலி என்று பேசியிருந்தார்.