‘தோல்’ நாவலுக்கு சாகித்ய அகாடெமி விருது பெற்ற டி.செல்வராஜ், இந்த விருதைப் பெற்றவர்களுக்கு நூலகங்களில் அங்கீகாரம் இல்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட 10ஆவது மாநாடு மற்றும் கலை இலக்கிய இரவு கருத்தரங்கம் வத்தலகுண்டில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் கலந்துகொண்ட டி.செல்வராஜ் கூறியதாவது:-
திண்டுக்கல் சூழ்நிலையைப் பற்றி நான் எழுதிய ‘தோல்’ நாவலுக்கு சாகித்ய அகாடெமி விருது பெற்றதற்கு மகிழ்ச்சி அடைகிறேன்.
இவ்வாறு விருது பெறும் நாவல்களை நூலகங்களில் 5000 பிரதிகளாவது வாங்கவேண்டும். தோல் நாவலை 10 ஆயிரம் பிரதிக்கும் மேல் நூலகங்களில் வாங்குவார்கள் என எதிர்பார்த்தேன்.
ஆனால், இதுவரை ஒரு பிரதி கூட வாங்கவில்லை. இது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. தமிழக அரசு சிறு எழுத்தாளர்கள் முதல் கவிஞர்கள் வரை ஊக்குவிக்க வேண்டும்.
சிறந்த நூல்களை நூலகங்களில் வாங்க ஏற்பாடு செய்யவேண்டும். இம்மாதிரி நூல்கள் வாங்கப்படாததால், எழுத்தாளர்கள் குறைந்து கொண்டே வருகின்றனர்” இவ்வாறு டி.செல்வராஜ் கூறினார்.
டி.செல்வராஜ், 2012ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடெமி விருதைப் பெற்றவர். இவர் எழுதிய ‘தோல்’ என்னும் நாவலுக்காக இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.