திருவள்ளுவர் திருநாள் விழா” என்ற பெயரில் ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அழைப்பிதழில், காவி உடையுடன் திருவள்ளுவரின் படம் இடம்பெற்றுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, காவி உடையில் இருக்கும் திருவள்ளுவரின் புகைப்படத்தை வெளியிட்டு திருவள்ளுவர் தின வாழ்த்து தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளப்பின.
இந்த நிலையில், தற்போது மீண்டும் இதுபோன்று சர்ச்சை ஏற்பட்டுள்ளது. நாளை மாலை 5 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் “திருவள்ளுவர் திருநாள் விழா” நடைபெறும் என ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.
ஆளுநரின் செயலாளர் கிர்லோஷ்குமார் பெயரில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பிதழில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக அரசு மற்றும் பல்வேறு அமைப்புகளும் பயன்படுத்தும் படங்களில் திருவள்ளுவர் வெள்ளுடை அணிந்திருப்பதே வழக்கம்.
ஆனால், பாஜக மற்றும் இந்து அமைப்புகள் காவி நிற உடையோடு திருவள்ளுவர் படத்தை அச்சிட்டு வருகின்றனர். தற்போது காவி உடையில் வள்ளுவர் படத்தை ஆளுநர் மாளிகை வெளியிட்டிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.