பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சலுகைகளைப் பெற சசிகலா லஞ்சம் தந்ததும், காவல் அதிகாரி ரூபா கூறிய புகார்களும் உண்மையே என அறிக்கை வெளியாகியுள்ளது.
சொத்துகுவிப்பு வழக்கில் சிக்கிய ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய நான்கு பேரும் குற்றவாளி எனத் தீர்ப்பாகி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 வருடம் சிறை தண்டனை விதித்து கடந்த 2017 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதில் ஜெயலலிதா உயிர் இழந்து விட்டதால் மற்ற மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு சிறையில் இருந்தபடியே மாற்று உடைகளில் சசிகலா ஷாப்பிங் சென்றதாக பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பின. மேலும் சிறை விதிகள் மீறி சலுகைகள் பெற்றதாக சசிகலா மீது கர்நாடகா சிறைத்துறை முன்னாள் டிஜிபி ரூபா புகார் அளித்தார். அதற்கான ஆதாரங்களையும் அவர் சமர்ப்பித்தார்.
ஆனால் ரூபா வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதால் குற்றச்சாட்டுக் கண்டுகொள்ளப்படாமல் இருந்தது. இருப்பினும் இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்க இதுகுறித்து விசாரணை நடத்த குழுவை அமைத்தது கர்நாடக அரசு. மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணி மாற்றம் செய்தது.
இதனை தொடர்ந்து தற்போது அந்த விசாரணை குழு ரூபாவின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையே என அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான சில பின்வருமாறு,
சசிகலா சிறையில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து சலுகைகளை பெற்றுள்ளார். சசிகலா மற்றும் இளவரசி மட்டுமே சிறையில் 5 செல்களை பயன்படுத்தி வந்துள்ளனர். சிறைக்குள் சமைப்பது, சிறையில் இருந்து வெளியே செல்வது என இருந்துள்ளனர். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் சசிகலாவிற்கென தனி பதிவேட்டை சிறைத்துறை பராமரித்து வந்துள்ளது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.