Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்.! நயினார் நாகேந்திரனிடம் சிபிசிஐடி விசாரணை..!!

Nayinar Nagendran

Senthil Velan

, செவ்வாய், 16 ஜூலை 2024 (11:55 IST)
ஓடும் ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரனிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்ற மக்களவைத் தேர்தலை ஒட்டி,  தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அதன்படி, கடந்த ஏப்ரல் 6-ம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை விரைவு ரயிலில் சோதனை நடத்தியபோது ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
 
இந்தப் பணத்தைக் கொண்டு சென்றதாக பாஜக நெல்லை வேட்பாளரும் எம்எல்ஏ-வுமான நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர்கள் சென்னை திரு.வி.க.நகரைச் சேர்ந்த சதீஷ், அவரது தம்பி நவீன், ஸ்ரீவைகுண்டம் பெருமாள் ஆகியோரை தாம்பரம் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் தேர்தல் செலவுக்காக இந்த பணம் கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியானது.

இதனை நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாக மறுத்தார்.  இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. பணத்துடன் பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.  மேலும் நயினார் நாகேந்திரன், தமிழக பாஜக அமைப்பு செயலாளர் கேசவவிநாயகன், கோவர்தன், நயினார் நாகேந்திரனின் உதவியாளர் மணிகண்டன் ஆகிய 4 பேருக்கும் விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது.

இதில், கேசவ விநாயகன் ஆஜராகி விளக்கம் அளித்தார். பாஜக மாநில பொருளாளரான எஸ்.ஆர்.சேகருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவர் நேரில் ஆஜராகாமல் விலக்கு கேட்டு நீதிமன்றத்தை நாடினார். பின்னர் நீதிமன்றம் வலியுறுத்தியதையடுத்து தனக்கு அனுப்பப்பட்ட சம்மனை ஏற்று அண்மையில் அவரும் விசாரணக்கு ஆஜரானார்.
 
இந்நிலையில் நயினார் நாகேந்திரன் இன்று காலை சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம் சிபிசிஐடி போலீசார் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் அளிக்கும் பதில்கள் அனைத்தும் எழுத்து பூர்வமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இனி வீடு தேடி வரும் மதுபானங்கள்!? உணவு டெலிவரி நிறுவனங்கள் ப்ளான்!