நேற்று சுபமுகூர்த்த தினம் என்பதால் கூடுதல் நேரத்தில் பத்திரப்பதிவுத்துறை இயங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று ஒரே நாளில் 180 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது
அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் சுபமுகூர்த்த தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப் பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் 18.10.2023 அன்று ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகத்திலும் கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்பட்டன. அதன் விளைவாக நேற்று மட்டும் ஒரே நாளில் ரூ.180 கோடி வருவாய் ஈட்டி பதிவுத்துறை சாதனை படைத்துள்ளது.
சுபமுகூர்த்த தினமாக கருதப்படும் ஐப்பசி மாதத்தின் முதல் வெள்ளிக் கிழமையான எதிர்வரும் 20.10.2023 அன்றும் அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என எதிர்பார்க்கப்படுவதால் 20.10.2023 அன்று கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்பட வேண்டும் என பதிவுத்துறைக்கு உத்திரவிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும். இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும் வழங்கப்படும். அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுடன் கூடுதலாக நான்கு தட்கல் முன்பதிவு டோக்கன்களும் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது