சென்னையில் கடந்த 6 ஆம் தேதி முதல் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு அபராதம் வசூலிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புகள் கடந்த சில காலமாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. தினசரி பாதிப்புகள் 2500ஐ தாண்டியுள்ள நிலையில் சென்னையில் மட்டும் பாதிப்புகள் 1000-க்கும் மேல் பதிவாகியுள்ளது.
இதனால் சென்னையில் கடந்த 6 ஆம் தேதி முதல் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு, முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் வசூலிக்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகமும் முகக்கவசத்தை கட்டாயமாக்கியது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களில் 6 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களில் முகக்கவசம் அணியாத 121 நபர்களிடமிருந்து ரூ.80,500 அபராதம் வசூலிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து நேற்று (7 ஆம் தேதி) மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களில் முகக்கவசம் அணியாத 233 நபர்களிடமிருந்து ரூ.1,16,500 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.