கடந்த சில நாட்களுக்கு முன் நிறுத்தி வைக்கப்பட்ட நாகை - இலங்கை கப்பல் சேவை மீண்டும் தொடங்குவது குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளன.
தமிழகம் மற்றும் இலங்கை இடையே கப்பல் சேவை சுமார் 40 ஆண்டு கால இடைவெளிக்கு பிறகு கடந்த 2023 ஆம் ஆண்டு மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில், வடகிழக்கு பருவமழை காரணமாக தற்காலிகமாக சமீபத்தில் இந்த கப்பல் சேவை நிறுத்தப்பட்டது.
நாகை மற்றும் காங்கேசன்துறை இடையே பயணிகளுக்கு கப்பல் சேவை கடந்த ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி தொடங்கிய நிலையில், வானிலை காரணமாக நவம்பர் 19 முதல் டிசம்பர் 18 வரை நிறுத்தப்படுவதாக கப்பல் சேவை நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் மீண்டும் இந்த சேவை ஜனவரி 2 முதல் தொடங்கப்படும் என்றும், இதற்கான முன்பதிவு டிசம்பர் 25 முதல் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாரத்தில் ஆறு நாட்கள் கப்பல் சேவை இருக்கும் என்றும், ஒரு சுற்றுக்கான போக்குவரத்து டிக்கெட் 35 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனவே, இலங்கைக்கு கப்பலில் செல்ல இருக்கும் பயணிகள் தங்களது டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து உறுதி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.