ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிட்டு பிரபலமான இன்பா என்பவர் மீது திருச்சி சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் பலரும் ரீல்ஸ் வீடியோக்கள் செய்து பதிவிடும் நிலையில் அவர்களை ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவ்வாறு வீடியோ வெளியிடுபவர்கள் சில சமயங்களில் இளைஞர்களை தவறாக வழிநடத்தும் விதமான வீடியோக்களை வெளியிட்டால் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகள் முன்னதாக இளைஞர்களை சீர்கெடுக்கும் விதமாக செயல்பட்டதாக பப்ஜி மதன் என்பவர் கைது செய்யப்பட்டார். தற்போது அதுபோல வேறு ஒரு பிரமுகரும் கைது செய்யப்பட்டுள்ளார். இன்பா என்பவர் Inbas Track என்ற சேனல் மூலம் சில ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமாக இருந்து வந்துள்ளார். ஆனால் அதேசமயம் அவரது வீடியோக்கள் இளைஞர்களை சீர்கெடுக்கும் விதமாகவும், தவறாக வழிநடத்தும் விதமாகவும் உள்ளதாக பலரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர்.
இந்நிலையில் திருச்சி சைபர் க்ரைம் காவல்துறை இன்பா மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் “இன்பாஸ் ட்ராஜ்க் பார்க்கக் கூடிய குழந்தைகள், பெண்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் இடையே பாலியல் தொடர்பான எண்ணங்கள் ஏற்பட்டு பாலியல் குற்ற செயலில் அவர்கள் ஈடுபடும் வாய்ப்புள்ளது. இதனால் இளைஞர் சமுதாயத்திற்கு சீர்கேடு ஏற்படும்” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.