வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்திற்கு டிசம்பர் 2ல் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவான நிவர் புயலால் கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் நீர்நிலைகள் முழுவதுமாக நிரம்பியுள்ளன. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பாக நிவர் புயல் கரையை கடந்தது. தற்போது வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை டிசம்பர் 2ல் காற்றழுத்த மண்டலமாக மாற உள்ளதால் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கன மழையும், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் தமிழகத்திற்கு டிசம்பர் 2ல் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.