Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆர்.கே.நகரில் அதிமுக தோற்றதற்கு இதுதான் காரணம்?

Advertiesment
ஆர்.கே.நகரில் அதிமுக தோற்றதற்கு இதுதான் காரணம்?
, செவ்வாய், 26 டிசம்பர் 2017 (12:30 IST)
நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று, அதிமுக வேட்பாளர் மதுசூதனனை 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

 
இந்த தோல்வி ஆளும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் தரப்பினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அதிமுக கூடாரத்தையும் பலமாகவே அசைத்து பார்த்துள்ளது என்பதை மறுக்க முடியாது. 
 
2016ம் ஆண்டு, இதே ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சிம்லா ராஜேந்திரனை  39,545 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ஆனால், தற்போது தினகரனோ, மதுசூதனனை 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
 
பணம் கொடுத்து தினகரன் வெற்றி பெற்றுள்ளார்  என அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தோல்வி காரணங்களை கூறி வருகின்றனர். ஆனாலும், இறுதியாக ஓட்டு போட்டது மக்கள்தானே. பணம் வாங்கினாலும், யாருக்கு வாக்களிக்க வேண்டும் எனத் தோன்றுகிறதோ அவர்கள்தான் வெற்றி பெறுவார்கள் என ஒரு பக்கம் அரசியல் விமர்சர்கள் கூறி வருகின்றனர்.
webdunia

 
மத்திய அரசின் ஆதரவு, இரட்டை இலை சின்னம், ஆளும் கட்சி என்கிற அதிகாரம், காவல்துறை, தேர்தல் ஆணையம் என அனைத்தையும் தங்கள் பக்கம் இருந்தும் தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்ததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. அரசியல் விமர்சகர்கள், செய்தி தாள்கள், சமூக வலைத்தளங்கள் என பலவற்றிலும் தினகரனின் வெற்றி ஆராயப்படுகிறது. அது பற்றி இங்கு காண்போம்:
 
ஏற்கனவே ஜெ. நின்று வெற்றி பெற்ற தொகுதி. இரட்டை இலை சின்னம் நம் பக்கம். இதுவே நம்மை வெற்றி பெற வைக்கும் என எடப்பாடி தரப்பு சற்று அலட்சியமாக இருந்திருக்கலாம். அதன் காரணமாக, தீவிர பிரச்சாரத்தில் அதிமுகவினர் ஈடுபடவில்லை. முக்கியமாக அதிமுக சார்பில் நட்சத்திர பேச்சாளர்கள் நியமிக்கப்படவில்லை.

தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்ட ஏராளமான நிர்வாகிகளில் பெரும்பாலானோர் தினகரனின் மறைமுக ஆதரவாளர்கள். எனவே, வெற்றிவேல் எம்.எல்.ஏ அவர்களை சுலபமாக தங்கள் பக்கம் கொண்டு வந்து விட்டார். 
 
அதிமுக தரப்பில் திடமான பிரச்சார திட்டம் ஒன்றுமில்லை. ஆனால், தினகரனே திட்டம் போட்டு, காய்களை நகர்த்தி பிரச்சாரம் செய்தார்.
 
தேர்தல் பிரச்சாரம் செய்ய ஜெயலலிதா சென்றால் அவரை மக்கள் ஈர்ப்புடன் வந்து பார்த்தனர். அது இந்த முறை தினகரனுக்கு கிடைத்தது. அதேபோல், அது ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடிக்கு அது கிடைக்கவில்லை. அவர்கள் இருவரையும் மிக சாதரணமாகவே மக்கள் கடந்து சென்றனர்.
webdunia

 
அதிமுகவின் வாக்கு வங்கியை தினகரன் நிச்சயம் உடைப்பார். எனவே, அது நமக்கு சாதகமாக அமையும் என மு.க.ஸ்டாலின் கணக்கு போட்டார். அதனால், திமுக தரப்பிலும் பிரச்சார வியூகங்கள் அமைக்கப்படவில்லை. எனவே, அதிமுக மற்றும் திமுக ஓட்டுகளை தினகரன் அறுவடை செய்தார்.
 
கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.கே.நகரில் தினகரன் போட்டியிட்ட போது, அவருக்கு ஆதரவாக எடப்பாடி மற்றும் அமைச்சர்கள் தீவிர பிரச்சாரம் செய்து தொகுதி மக்களிடையே அவரை கொண்டு சேர்த்தனர். அதற்கான பலன் இந்த தேர்தலில் தினகரனுக்கு கிடைத்துள்ளது.
 
கடந்த ஏப்ரல் மாதம் தேர்தலை நிறுத்தியது, இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் கைது செய்து சிறையில் அடைத்தது. வருமான வரித்துறை சோதனை, தொடர் வழக்குகள், இரட்டை இலை சின்னம் மற்றும் தொப்பி சின்னத்தை கூட கிடைக்க விடாமல் செய்தது ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு தினகரன் மீது ஒரு அனுதாபத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.
 
முக்கிய காரணமாக, எடப்பாடி - ஓபிஎஸ் தரப்பு மத்திய அரசுக்கு அடிபணிந்து போகும் போது, தினகரனோ அதை எதித்து குரல் கொடுத்து வருவது மக்களுக்கு பிடித்துப்போனது.

மதுசூதனன் முதல் ஜெயலலிதா வரை ஆர்.கே.நகரில் பல எம்.எல்.ஏக்கள் மாறியும், அந்தப்பகுதி மக்களின் சாக்கடை கழிவு, கழிப்பறை வசதி, கல்வி மற்றும் சுகாதரம் உள்ளிட்ட அடிப்படை எதுவும் சரி செய்யப்படவில்லை. எனவே, தினகரனாவது நமக்கு அவற்றை செய்து தருவார் என அப்பகுதி மக்கள் நம்பியிருக்கலாம்.
webdunia
 
அதிமுக பிரச்சாரத்தில் தங்கள் தரப்பில் முக்கிய வாக்குறுதிகள் எதையும் எடப்பாடி-ஓபிஎஸ் தரப்பு தரவில்லை. அதையே கையெலெடுத்து, பல வாக்குறுதிகளை கொடுத்து ஸ்கோர் செய்தார் தினகரன்.
 
கன்னியாகுமரியில் மீனவர்கள் கதறிக்கொண்டிருந்த போது, எடப்பாடி தலைமையிலான அரசு தமிழகமெங்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை நடத்திக்கொண்டிருந்தது. இது ஆர்.கே.நகர் தொகுதியில் வாழும் மீனவ சமுதாயத்தினருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அவர்களின் ஓட்டுகள் தினகரனுக்கும், திமுகவிற்கும் பிரிந்திருக்க வாய்ப்புண்டு.
 
தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் வேட்பாளரை முதலில் அறிவிப்பார் ஜெயலலிதா. ஆனால், இந்த முறை மதுசூதனனே வேட்பாளர் என ஓபிஎஸ் தரப்பு கொடி பிடிக்க, ஜெயக்குமார் உள்ளிட்ட சில அமைச்சர்கள் அதை கடுமையாக எதிர்க்க, பலரிடம் விருப்பமனு பெற்று, இறுதியில் மதுசூதனனையே வேட்பாளர்களாக அறிவித்தார்கள்.  இது கட்சிக்குள் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
webdunia

 
இதற்கு முன்பே இந்த தொகுதியில் மதுசூதனன் எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளரார். அவர் அந்த பகுதியில் வசித்து வருபவரும் கூட. ஆனால், அந்த பகுதி மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை எனவும், அதனால், அப்பகுதி மக்கள் அவர் மீது அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
 
முக்கியமாக, ஜெயலலிதா என்கிற ஒற்றைத் தலைமை இருந்தவரை அதிமுவிற்கு பின்னடைவு இல்லை. தற்போது எடப்பாடி- ஓபிஎஸ் இரட்டை தலைமையை மக்கள் விரும்பவில்லை. மேலும், ஆட்சிக்கு வந்து இவ்வளவு மாதங்களாகியும் மக்கள் பயன் பெறும்படி எந்த திட்டத்தையும் அவர்கள் செயல்படுத்தவில்லை. மேலும், அவர்களின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் அவர்களின் மீது கோபத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதன் வெளிப்பாடே ஆர்.கே.நகர் தேர்தலின் முடிவில் எதிரொலித்துள்ளது என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 3 பாகிஸ்தான் வீரர்கள் பலி