புதிய கல்வி கொள்கை குறித்த தமிழக அரசின் நிலைப்பாட்டை விமர்சித்த எல் முருகனுக்கு பதிலடி கொடுத்துள்ளார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்வி கொள்கையில் உள்ள மும்மொழிக் கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை விமர்சிப்பவர்கள் முதலில் அதை முழுமையாக படித்து பார்க்க வேண்டும். உலக அளவில் நம் மாணவர்கள் போட்டியிட புதிய கல்வி கொள்கை உதவியாக இருக்கும். அறிவு மற்றும் கற்றல் ஆகியவை அனைவருக்கும் பொது என்பதே இக்கொள்கை வலியுறுத்துகிறது.
ஏழை, பணக்காரன், அரசு பள்ளி, தனியார் பள்ளி என்ற பாகுபாடுகளை களைந்து அனைவருக்கும் தரமான உயர்வான கல்வியை நிறுவுவதே புதிய கல்விக் கொள்கையின் நோக்கம் என தெரிவித்துள்ளார். மேலும் மூன்றாவதாக ஒரு மொழியை பயில மாணவர்கள் ஆர்வமும், விருப்பமும் கொண்டிருக்கிறார்கள். எனவே அவர்களை தமிழக அரசு ஊக்கப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதற்கு பதில் அளித்துள்ள அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தமிழகத்தில் மொழி திணிப்பைதான் நாங்கள் எதிர்க்கிறோம், மொழியை கற்றுக்கொள்வதையல்ல என தெரிவித்துள்ளார். எனவே கல்வி கொள்கை விவகாரத்தில் அதிமுக - பாஜக இடையே சில முறன்பாடுகள் உருவாகலாம் என தெரிகிறது.