சென்னையின் வண்ணாரப்பேட்டை விஜயராகவன் தெருவில், 60 ஆண்டுகளுக்கும் மேலாக சிதிலமடைந்த கட்டடத்தில் இயங்கி வந்த நியாயவிலை கடையின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், விற்பனையாளரான ஜெயந்தி படுகாயம் அடைந்தார். உடனடியாக மீட்கப்பட்ட அவர், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து பேசிய ஜெயந்தியின் கணவர் குணாளன், அதிகாரிகள் மீது தீவிர குற்றச்சாட்டுகளை வைத்தார். கடை மேம்பாலத்தின் கீழ் மிகவும் பழமையான கட்டடத்தில் இயங்கி வருகிறது.
நாம்கோ மேலாண்மை இயக்குநரிடம் பலமுறை புகார் அளித்தும், கடையை வேறு இடத்திற்கு மாற்றவோ அல்லது ஜெயந்திக்கு வேறு கடைக்கு மாற்று பணி வழங்கவோ அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த விபத்து வாடிக்கையாளர்கள் அதிகம் இருந்த நேரத்தில் நடக்காதது அதிர்ஷ்டமே என்றும், சிதிலமடைந்த கடை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதிகாரிகளின் அலட்சியமே விபத்திற்கு காரணம் என்று கூறப்படும் நிலையில், காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.