ராம்குமார் மரணம் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது: நீதிபதி சந்துரு கருத்து!
ராம்குமார் மரணம் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது: நீதிபதி சந்துரு கருத்து!
இளம்பெண் சுவாதி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் நேற்று மின்சார கம்பியை கடித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது. பலரும் இந்த தற்கொலையில் சந்தேகத்தை எழுப்பி வாரும் வேளையில் நீதிபதி சந்துருவும் தனது சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் புழல் சிறைச்சாலையில் அடைக்கப்படிருந்தார். இந்நிலையில் நேற்று மாலை 4.30 மணிக்கு அவர் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ராம்குமாரின் மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துவரும் நிலையில் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு கூறுகையில்,
ராம்குமார் மரணத்தில் சிறை அதிகாரிகள்தான் விளக்கம் தர வேண்டும். சிறையில் பாதுகாப்பை மீறி எப்படி இப்படி ஒரு சம்பவம் நடைபெற முடியும்? சிறைக்கு வரும் முன்பு பெரும்பாலும் அனைவரும் நலமாகவே உள்ளனர். ஆனால் சிறைக்கு வந்ததும் அவர்கள் மரணமடையும் அளவுக்குப் போகிறார்கள்.
வயர்கள் எல்லாம் வெளியில் தெரியும்படி எந்த சிறையிலும் இருக்காது. சுவர்களுக்குள் பதிக்கப்பட்ட நிலையில்தான் இருக்கும். அப்படி இருக்கும்போது வயரை எப்படி எடுத்து கடிக்க முடியும். இது திட்டமிட்டு செய்தது போல தெரிகிறது. வழக்கை சீக்கிரமே முடிக்க வேண்டும் என்ற நோக்கம் இருப்பதாக தெரிகிறது என்று நீதிபதி சந்துரு தெரிவித்துள்ளார்.