சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதியை கொலை செய்த ராம்குமாரை காவல் துறையினர் இன்று அதிகாலை நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் கைது செய்தனர்.
சூளைமேட்டை சேர்ந்த ஒரு மேன்சனில் தங்கி இருந்த ராம்குமார் நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள மீனாட்சி புரம் பகுதியை சார்ந்தவர். இன்று அதிகாலை காவல் துறையினர் ராம்குமாரை கைது செய்ய முயன்றபோது, அவர் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
உடனடியாக குற்றவாளியை கைது செய்த காவலர்கள் செங்கோட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து, பின்னர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு அறுவைசிகிச்சை செய்த மருத்துவர்கள் ராம்குமார் அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தெரிவித்தனர்.
கடந்த 24ம் தேதி அன்று சுவாதியை கொலை செய்த ராம்குமார், மறுநாள் தனது சொந்த ஊரான செங்கோட்டைக்கு சென்றுள்ளார். அங்கு அவரது பெற்றோர்,தங்கையுடன் இருந்தார். கொலையாளி குறித்த செய்திகள் மீடியாக்களிலும் செய்திதாள்களிலும் வெளியானதை கண்டு அச்சத்தில் இருந்துவந்தாராம். ஆனாலும் அதனை வெளிகாட்டிகொள்ளாமல் வீட்டில் அனைவருடன் சகஜமாக இருந்துள்ளார். ஆனாலும் தினமும் செய்திதாள்களை படித்து விசாரணை குறித்து தெரிந்து வந்துள்ளார்.
குற்றவாளி குறித்த தகவல் கிடைத்ததும் விரைந்த போலீஸார் அவனை கைது செய்ய முயன்றனர். இதனை அறிந்த ராம்குமார் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவனை மீட்ட போலீசார் மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது அவனது படுக்கையின் கீழ் சோதனை செய்தபோது சுவாதி கொலை குறித்த செய்திதாள்கள் இருந்தன. விசாரணை குறித்த விபரங்களை தினமும் செய்திதாள்களின் முலம் அவன் அறிந்து வந்தது தெரிகிறது.