Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடித்து காட்டிய ராம்குமார்

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடித்து காட்டிய ராம்குமார்
, திங்கள், 18 ஜூலை 2016 (08:09 IST)
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதியை கொலை செய்த விதம் குறித்து ராம்குமார் காவல் துறையினர் முன்னிலையில் நடித்து காட்டினார். கொலை செய்து தப்பிச் சென்ற வழியையும் காட்டினார்.


 

 
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ராம்குமார் தரப்பு வழக்கறிஞர் ராம்ராஜ் சார்பில் சந்தேகத்துக்குரிய பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இந்நிலையில் ராம்குமாரிடம் போலீஸ் காவலில் நடத்தப்பட்ட விசாரணை குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
 
ராம்குமாரை போலீஸ் காவலில் எடுத்த 13ஆம் தேதி நள்ளிரவில் ராம்குமாரை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு அழைத்து சென்றோம். பயணிகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத நேரம், மிக முக்கியமாக தொலைக்காட்சி கேமராமேன்கள் இல்லாத நேரத்தை கவனமாக பார்த்து நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு ராம்குமாரை அழைத்து சென்றோம்.
 
சுவாதி கொலை செய்யப்பட்ட நாளில் ரயில் நிலையத்துக்குள் ராம்குமார் எந்த வழியாக வந்தார், சுவாதியை எவ்வளவு தூரத்தில் வைத்து பார்த்தார், சுவாதியின் அருகே சென்று அவரை எப்படி வெட்டினார், எத்தனை முறை வெட்டினார், பின்னர் அரிவாளுடன் நடைமேடையில் எந்த வழியாக ஓடினார், அரிவாளை எந்த இடத்தில் வைத்து தூக்கி எறிந்தார், ரயில் நிலையத்தில் இருந்து சுவர் ஏறி குதித்து வெளியே வந்தது, பின்னர் அவர் தப்பி சென்ற தெருக்கள் போன்றவற்றை ராம்குமார் நடித்து காட்டினார். இவை அனைத்தையும் நாங்கள் வீடியோ எடுத்து வைத்து இருக்கிறோம்.
 
கொலை நடந்த விதத்தை அப்படியே எழுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கும், கொலை நடந்த விதத்தில் இருக்கும் சந்தேகங்களை தெளிவு படுத்துவதற்கும், நடித்து காட்ட வைப்பது அவசியமாகிறது, என்று கூறியுள்ளார்.
 
காவல் துறையினர் ராம்குமார்தான் குற்றவாளி என்பதற்கு போதுமான ஆதாரங்களை திரட்டி வைத்துள்ளனர். ராம்குமாரின் கொலை குற்றத்தின் ஒப்புதல் வாக்குமூலம், ராம்குமார் நடித்து காட்டிய வீடியோ பதிவு என போதுமான ஆதாரங்களை ராம்குமாருக்கு எதிராக திரட்டிவிட்டனர். மேலும் தடவியல் துறையின் அறிக்கை வந்தபின், மொத்த ஆதாரங்களையும் திரட்டி, 15 நாட்களுக்குள் காவல் துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்வாதிய அறஞ்சவன் எவன்டா? வைரலாக பரவும் வீடியோ