தமிழகத்தில் கடந்த மே மாதம் முதலாக திமுக ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில காலமாக அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக புகார்கள் அதிகரித்துள்ளன.
கடந்த 2008 ஆம் ஆண்டில் திமுக ஆட்சியில் இருந்தபோது தினம்தோறும் மின்தடை ஏற்பட்டு மக்கள் பலர் வெகுவாக பாதிக்கப்பட்டனர். 2011 தேர்தலில் திமுகவின் தோல்விக்கு முக்கிய காரணமாக தொடர் மின்வெட்டும் கூட சொல்லப்பட்டது. இந்நிலையில் மீண்டும் திமுக ஆட்சியில் மின்தடை ஏற்படுவது மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
நேற்று நள்ளிரவு திடீரென தமிழகத்தின் பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. இதுகுறித்து மக்கள் சமூக வலைதளங்களிலும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்தனர். நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட இந்த திடீர் மின்தடை குறித்து விளக்கம் அளித்துள்ள தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி “இன்றிரவு மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தடைபட்டது.
இதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின்பற்றாக்குறையை சமாளிக்க நமது வாரியத்தின் உற்பத்தித்திறனை உடனடியாக அதிகரித்தும், தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதனால் நகர்பபுறங்களில் உடனடியாக நிலைமை சரி செய்யப்பட்டது. ஊரகப் பகுதிகளிலும் அடுத்த 15 நிமிடங்களில் நிலைமை சீரடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருந்தார். எனினும் இந்த மின்தடை விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுப்பொருளாகியுள்ளது.
இதனைத்தொடர்ந்து மின்வெட்டை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் என்றார் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து ட்விட் செய்துள்ள ராமதாஸ், ஒன்றியத் தொகுப்பில் இருந்து 750 மெகாவாட் மின்சாரம் தடைபட்டதே காரணம் என்று அமைச்சர் கூறியது உண்மையாக இருக்கலாம். எதிர்பாராத நிகழ்வுகளை சமாளித்து மக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்குவது தான் மின்வாரிய பணி என குறிப்பிட்டிருக்கிறார்.