Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெ. சிகிச்சை குறித்த ரிச்சர்ட் பீலேயின் விளக்கம் ஐயத்தை அதிகரித்துள்ளது!: ராமதாஸ்

ஜெ. சிகிச்சை குறித்த ரிச்சர்ட் பீலேயின் விளக்கம் ஐயத்தை அதிகரித்துள்ளது!: ராமதாஸ்
, திங்கள், 6 பிப்ரவரி 2017 (21:16 IST)
அப்பல்லோ மருத்துவர் ரிச்சர்ட் பீலேவின் விளக்கம் ஐயத்தைப் போக்குவதற்குப் பதிலாக, மேலும் அதிகரித்துள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

 

 
ஜெயலலிதா மரணம் குறித்த பல்வேறு கேள்விகள் எழுந்து வரும் நிலையில் அதற்கு விளக்கம் அளிக்க இன்று சென்னை நுங்கம்பாக்கம் தனியார் ஓட்டலில் இன்று மதியம்,  ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டர் டாக்டர் ரிச்சர்ட் பீலே உள்ளிட்ட மருத்துவர்கள் ஊடகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.
 
இந்நிலையில் இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பேல், அப்பல்லோ மருத்துவர் பாபு ஆப்ரஹாம் மற்றும் தமிழக அரசு மருத்துவர்கள் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த விளக்கம் சிகிச்சை குறித்த ஐயங்களை போக்குவதற்கு பதிலாக மேலும் அதிகரித்திருக்கிறது. 
 
அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட போதே அவருக்கு செப்டிசீமியா எனப்படும் கிருமித் தொற்று தாக்கியிருந்ததாகவும், அவர் இன்னும் சில நாட்களுக்கு முன்பே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் ரிச்சர்ட் பேல் கூறியிருக்கிறார்.
 
மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு முன்பே ஜெயலலிதாவுக்கு வீட்டில் வைத்து சசிகலாவின் உறவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு முன்பாக அவரது இல்லத்தில் வைத்து எந்த நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டது? ஜெயலலிதாவுக்கு செப்டிசீமியா தாக்குதல் இருந்தது அப்போதே தெரியுமா? தமிழகத்தின் முதல்வரான ஜெயலலிதாவுக்கு வீட்டில் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து யாருக்கும் தெரிவிக்கப்படாதது ஏன்?
 
ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போதே அவருக்கு செப்சிஸ் தொற்று இருந்திருந்தால்  அது குறித்து உடனடியாக தெரிவிக்கப்படாதது ஏன்?  ஜெயலலிதாவுக்கு காய்ச்சலும், நீர்ச்சத்துக் குறைவும் மட்டுமே இருந்ததாகவும், அதுவும் உடனடியாக குணப்படுத்தப்பட்டதால் அவர் வழக்கமான உணவுகளை உட்கொள்ளத் தொடங்கி விட்டதாகவும் மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டது ஏன்? ஜெயலலிதாவுக்கு செப்சிஸ் நோய்த் தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்காகத் தான் அக்டோபர் முதல் வாரத்தில் ரிச்சர்ட் பேல் சென்னை வந்திருப்பதாக  ஊடகங்களில் செய்தி வெளிவந்த போதும் கூட, அடுத்தடுத்து அப்பல்லோ மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கைகளில் செப்சிஸ்  கிருமித் தாக்குதல் குறித்து குறிப்பிடப்படாதது ஏன்? என்ற வினாக்களுக்கு விடையளிக்கப்படவில்லை.
 
ஜெயலலிதாவுக்கு செப்சிஸ் உள்ளிட்ட அனைத்து நோய்களும் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாகவும்,   மாரடைப்பு மட்டும் ஏற்படாவிட்டால் வீடு திரும்பியிருப்பார் என்றும் ஓரிடத்தில் ரிச்சர்ட் பேல் கூறினார். மற்றொரு இடத்தில் செப்சிஸ் கிருமித் தொற்று இதயத்தைத் தாக்கியதால் தான் மாரடைப்பு ஏற்பட்டதாக கூறுகிறார். ரிச்சர்ட் பேல் கூறும் இந்த இரு விஷயங்களும் முன்னுக்குப் பின் முரணாக இல்லையா?
 
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த மர்மங்களை போக்கும் வகையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படும் காட்சிகள் அடங்கிய வீடியோ பதிவுகளை வெளியிட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால், ஜெயலலிதா மருத்துவம் பெற்று வந்த அறையில் காணொலி பதிவுக் காமிரா எதுவும் பொருத்தப்படவில்லை என்று மருத்துவர் ரிச்சர்ட் பேல் கூறியிருக்கிறார். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு கடந்த ஜனவரி மாதம் 9ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, அப்பல்லோ மருத்துவமனை சார்பில் நேர்நின்ற வழக்கறிஞர், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகளின் விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யத் தயார் என்று கூறினார்.
 
அப்போது கூட ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட அறையில் காமிரா பொருத்தப்படவில்லை என்று அவர் கூறவில்லை. அத்தகைய சூழலில், ஜெயலலிதா அறையில் காமிரா இல்லை என ரிச்சர்ட் பேல் இப்போது கூறுவது விந்தையாக உள்ளது; நம்பும்படியாக இல்லை.
 
மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் கண்காணிப்பு காமிராக்கள் இருப்பது கட்டாயம் ஆகும். ஒருவேளை நோயாளிகளின் தனிமையுரிமை குறித்து ஏதேனும் வினா எழுந்தால், அறையின் நடைபாதைகளிலாவது பொருத்தப்பட்டிருக்க வேண்டும். அதுமட்டுமின்றி, ஜெயலலிதாவுக்கு உடல்நிலை தேறிய நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சாதாரண அறைக்கு மாற்றப்படும்போது அக்காட்சிகள் தாழ்வாரங்களில் பொருத்தப்பட்டிருக்கும் காமிராக்களில் பதிவாகியிருக்க வேண்டும்.
 
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகளில் எந்த சர்ச்சையும் இல்லை என்றால் இந்த பதிவுகளை வெளியிடுவதில் தயக்கம் ஏன்? ஜெயலலிதாவுக்கு சிகிச்சை தொடங்கியதுமே அது குறித்த சர்ச்சைகளும் தொடங்கி விட்டன. அவ்வாறு இருக்கும் போது எதிர்காலத்தில் சர்ச்சை எழுந்தால் அவற்றை களைவதற்காவது  ஜெயலலிதாவின் தனியுரிமையை பாதிக்காத வகையில் சில வீடியோ பதிவுகளை செய்திருக்க வேண்டும். ஆனால், அத்தகைய பதிவுகளைக் கூட செய்யாத அளவுக்கு அப்பல்லோ நிர்வாகத்தை தடுத்தது யார்?
 
மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைகளின் காரணமாக சில அடி தூரம் நடக்கும் அளவுக்கு  ஜெயலலிதா தேறியிருந்தார் என்று மருத்துவர் பாபு ஆப்ரஹாம் கூறியுள்ளார். மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தவர் இந்த அளவுக்கு தேறினால், மருத்துவமனையின் சாதனை என பதிவு செய்வதற்காகவாவது, அதை வீடியோ பதிவு செய்வது வழக்கம். அதுவும் ஒரு முதலமைச்சரின் உடல்நிலை இந்த அளவுக்கு தேறியிருந்தால் அது நிச்சயம் ஆவணப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அதை செய்ய அப்பல்லோ நிர்வாகம் தவறியது ஏன்? என்ற வினாவும் கூடுதலாக எழுகிறது.
 
ஜெயலலிதாவின் உடலில் இருந்த காயங்கள், அவரது கால்கள் அகற்றப்பட்டதாக கூறப்படுவது குறித்த ஐயங்களுக்கும் மருத்துவர்கள் அளித்துள்ள விளக்கம் மனநிறைவு அளிக்கும்படியோ, ஏற்றுக் கொள்ளும் வகையிலோ இல்லை. ஜெயலலிதாவின் மரணம் மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த அனைத்து ஐயங்களும் தீர்க்கப்பட வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி மத்திய புலனாய்வுப் பிரிவு, மருத்துவ வல்லுனர்கள், நீதிபதிகள் அடங்கிய பல்துறை விசாரணைக்குழுவை (Multi Disciplinary Investigation Team)அமைத்து விசாரணை நடத்த ஆணையிடுவது தான். எனவே, அத்தகைய விசாரணைக்கு அரசு உடனடியாக ஆணையிட வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமெரிக்கர்கள் என்ன அப்பாவிகளா? டிரம்ப் கேள்வி