Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எரியும் நெருப்பு வளையத்தில் கொளுத்தப்படாத கற்பூரமாக தமிழகம்: ராமதாஸ் வேதனை!

Advertiesment
எரியும் நெருப்பு வளையத்தில் கொளுத்தப்படாத கற்பூரமாக தமிழகம்: ராமதாஸ் வேதனை!
, செவ்வாய், 5 மே 2020 (11:07 IST)
பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பதை எதிர்த்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது.... 
 
தமிழ்நாட்டில் மதுக்கடைகள் வரும் 7 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்றும், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 7 மணி நேரம் செயல்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இது தமிழ்நாட்டில் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும். இது மிகவும் துரதிருஷ்டவசமான முடிவாகும்.
 
ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டு இதுவரை 40 நாட்களுக்கு மேலாகி விட்ட நிலையில், மது கிடைக்காததால் எவரும் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் இல்லை. மதுவுக்கு அடிமையாகி, அது இல்லாவிட்டால் வாழவே முடியாது என்று வர்ணிக்கப்பட்டவர்கள் கூட, இப்போது மதுவை மறந்து விட்டு புதிய மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர். 
 
இதை பயன்படுத்தி தமிழகத்தை மது இல்லாத திசையில் பயணிக்க வைக்க வேண்டிய தருணத்தில் மதுக்கடைகளை மீண்டும் திறந்திருப்பது சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியாத முடிவாகும். இந்த தவறான முடிவால் கடந்த 6 வாரங்களாக விளைந்த நன்மைகள் அனைத்தும் முற்றிலுமாக சிதைக்கப்பட்டுள்ளன.
 
மதுக்கடைகளை மீண்டும் திறப்பதற்காக தமிழக அரசு கூறியுள்ள காரணம் சற்றும் ஏற்க முடியாதது. அதுமட்டுமின்றி, மதுவிலக்கு என்ற கோரிக்கை எழும் போதெல்லாம்,‘‘கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு வளையத்துக்குள் கொளுத்தப்படாத கற்பூரமாகத் தமிழ்நாடு இருக்கிறது’’ என்ற பழைய வசனத்தைக் கூறியே கடந்த கால ஆட்சியாளர்கள் மதுவிலக்கை மறுத்து வந்துள்ளனர். 
 
அதேகாரணத்தை இப்போதைய அரசும் கூறுவது சரியல்ல. அண்டை மாநிலங்களுக்கு மது அருந்த ஒரு சிலர் சென்றிருக்கலாம். அது தமிழகத்தின் மக்கள்தொகையில் 0.0001% கூட இருக்காது. அவர்களுக்காக தமிழகத்தில் ஒன்றரை கோடி குடும்பங்களை பாதிக்கும் வகையில் மதுக்கடைகள் திறக்கப்படுவதை ஏற்க முடியாது. 
 
மதுக்கடைகள் திறக்கப்பட்டால் நோய்த் தொற்று பரவும் வேகம் மேலும் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, கடந்த 40 நாட்களாக இல்லாமல் இருந்த சட்டம் & ஒழுங்கு பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். எனவே இம்முடிவை அரசு கைவிட வேண்டும், மதுவிலக்கை அறிவிக்க வேண்டும் என கேட்டுகொண்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எங்க போகணும்னாலும் ஆன்லைன் பாஸ் வாங்கணும்! – லிங்க் இதோ!