தடுப்பூசி முன்பதிவு தளமான கோவின்-ல் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் மத்திய அரசின் கோவின் இணையதளம் மூலமாக முன்பதிவு செய்வது கட்டாயம் என கூறப்பட்டுள்ளது. ஆங்கிலம் தெரியாதவர்கள் முன்பதிவு செய்ய வசதியாக பிராந்திய மொழிகளும் கோவின் தளத்தில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் அதில் இடம்பெறவில்லை,
இதுகுறித்து அதிருப்தி தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் “கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்வதற்கான கோவின் இணையதளத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒதியா உள்ளிட்ட 10 மாநில மொழிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால், உலகின் மூத்த மொழியான தமிழ் சேர்க்கப்படாததுவருத்தமளிக்கிறது!” என்று கூறியுள்ளார்.
மேலும் “கோவின் இணையதளத்தில் தமிழ் இல்லாததால் ஆங்கிலம் தெரியாதவர்களால் கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்ய முடியவில்லை. கோவின் தளத்தில் தமிழையும் சேர்க்க முயற்சிகள் செய்யப்பட்ட நிலையில், உடனடியாக தமிழில் முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்!” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.