Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சேலம் இரும்பாலையை தனியார் மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் : ராமதாஸ் கோரிக்கை

சேலம் இரும்பாலையை தனியார் மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் : ராமதாஸ் கோரிக்கை
, திங்கள், 25 ஜூலை 2016 (19:59 IST)
சேலத்தில் இயங்கும் அரசு இரும்பாலையை தனியார் மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
சேலம் மாவட்டத்தின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பொதுத்துறை நிறுவனத்தை தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் மத்திய அரசின் முடிவு கண்டிக்கத்தக்கது. இந்தியாவில் அதிவேகமாக வளர்ச்சியடைந்த இரும்பாலைகளில் சேலம் ஆலை முதன்மையாகும். 13 ஆண்டுகளாக லாபம் ஈட்டி வந்த இந்திய எஃகு நிறுவனம் கடந்த இரு ஆண்டுகளாக மீண்டும் நஷ்டத்தில் இயங்கத் தொடங்கியுள்ளது. 
 
இந்த நிறுவனத்தின் இழப்பைக் கட்டுப்படுத்தும் நோக்குடன், இந்த நிறுவனத்தின் அங்கமாக திகழும் சேலம் இரும்பாலை, கர்நாடகத்தில் செயல்பட்டு வரும் விஸ்வேஸ்வரய்யா இரும்பு ஆலை ஆகியவற்றின் பங்குகளில் குறிப்பிட்ட விழுக்காட்டை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
 
அதேநேரத்தில், இந்த இரு நிறுவனங்களையும் மொத்தமாக தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு தீர்மானித்திருப்பதாக மத்திய அரசு அதிகாரிகளை மேற்கோள் காட்டி தி பினான்சியல் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது. இதனால் சேலம் இரும்பாலையில் பணியாற்றும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் தற்காலிகத் தொழிலாளர்கள் எதிர்காலம் குறித்த அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். சேலம் இரும்பாலையை தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு முயல்வது இது முதல்முறையல்ல. 2000-ஆவது ஆண்டில் சேலம் இரும்பாலை நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறி தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. அப்போது பா.ம.க.உள்ளிட்ட கட்சிகள் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் தீவிரப் போராட்டங்களை நடத்தியதன் பயனாக அப்போது அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.
 
அதைத்தொடர்ந்து 2002ஆம் ஆண்டில் சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்க மத்திய அரசு மீண்டும் முயற்சித்தது. அதற்காக உலக அளவில் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன. ஜிண்டால் நிறுவனம் மட்டுமே ஒப்பந்தப்புள்ளி தாக்கல் செய்திருந்ததால், அதைக் காரணம் காட்டி அந்நிறுவனத்திடம் சேலம் இரும்பாலையை ஒப்படைக்க அரசு முடிவு செய்த போது பா.ம.க.வும், மற்ற கட்சிகளும் காட்டிய எதிர்ப்புக் காரணமாகவே அத்திட்டம் முறியடிக்கப்பட்டு ஆலை காப்பாற்றப்பட்டது. 
 
அப்போது முறியடிக்கப்பட்டத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதற்காகவே சேலம் இரும்பாலையை தனியாருக்கு ஒப்படைக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகத் தோன்றுகிறது. குறிப்பாக சேலத்தில் ஜிண்டால் இரும்பாலை விரிவுபடுத்தப்பட்டு வரும் நிலையில், அந்நிறுவனத்திடமே சேலம் இரும்பாலை ஒப்படைக்கப்பட வாய்ப்பிருப்பதாக தொழிற்சங்க நிர்வாகிகள் முன்வைக்கும் குற்றச்சாற்றில் அர்த்தம் இருப்பதாகவே தோன்றுகிறது. 
 
சேலம் இரும்பாலை தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதால் வேறு வழியில்லாமல் தான் அதை தனியார் மயமாக்க விரும்புவதாக அரசுத் தரப்பில் கூறப்படுவது மக்களையும், தொழிலாளர்களையும் ஏமாற்றும் செயலாகும். கடந்த 5 ஆண்டுகளில் இந்த ஆலை ரூ.1302 கோடி இழப்பை சந்தித்திருக்கிறது என்பது உண்மைதான். ஆனாலும், இந்த இழப்புக்கு காரணம் இரும்பாலை நிர்வாகத்தின் திறனின்மையும், அதில் பரவியிருக்கும் ஊழலும் தானே தவிர தொழிலாளர்கள் அல்ல.
 
இந்தியாவிலேயே உலகத்தரம் வாய்ந்த ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் எனப்படும் துருப்பிடிக்காத எஃகுவை அதிக அளவில் தயாரிக்கும் ஆலை சேலம் இரும்பாலை தான். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மெக்சிகோ, தென்கிழக்கு ஆசிய நாடுகள் என ஏராளமான நாடுகளுக்கு இந்த உலோகத்தை ஏற்றுமதி செய்யும் ஆலையும் இதுதான். இப்போது சூப்பர் இரும்பாலையாக இருக்கும் சேலம் ஆலையை ஒருங்கிணைந்த இரும்பாலையாக மாற்ற வேண்டும்; அதற்காக கூடுதல் முதலீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. 2002 ஆம் ஆண்டு சேலம் இரும்பாலையை விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசு கைவிட்ட போதிலும், ஆலையை நவீனமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது. 
 
அப்போது மட்டும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து ஆலையை நவீனமயமாக்கி இருந்தால், சேலம் இரும்பாலை இப்போது லாபத்தில் இயங்கத் தொடங்கியிருக்கும் என்பது உறுதி. சேலம் இரும்பாலையை தனியார் மயமாக்கும் முயற்சி அரசுக்கோ, தொழில்துறை வளச்சிக்கோ எந்த வகையிலும் உதவாது. சேலம் பகுதியிலுள்ள தாது வளங்களை தனியார் ஆலைகள் போட்டியின்றி கொள்ளை அடிப்பதற்கே உதவும். எனவே, சேலம் இரும்பாலையை தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டத்தைக் கைவிட்டு, ஆலையை நவீனமயமாக்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். மாறாக, சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்பனை செய்வதற்கான முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டால் மக்களையும், தொழிலாளர்களையும் திரட்டி போராடுவதன் மூலம் அதை பா.ம.க முறியடிக்கும்.

என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போதையில் எஸ்.ஐ.-யிடம் தகராறு செய்த போலி வக்கீல்கள் கைது