தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராம் மோகன் ராவுக்கு வருமான வரி சோதனை பற்றிய அடிப்படை விதிகளே தெரியவில்லை என முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன் கூறியுள்ளார்.
ராம் மோகன் ராவ் வீடு மற்றும் தலைமை செயலகத்தில் வருமான வரித்துறையினர் சமீபத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அதன் அவர் பதவியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டார். மேலும், அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என வருமான வரித்துறை அலுவலகத்திலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், தனக்கு நெஞ்சுவலி என்று கூறி, மருத்துவமனையில் சேர்ந்தார் ராம் மோகன் ராவ்.
இந்நிலையில், இன்று காலை தனது வீட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், அவர் வருமான வரித்துறையினர் மீது ஏராளமான புகார்களை கூறினார். அதிகாரிகள் கொண்டு வந்த வாரண்டில் தன்னுடைய மகன் பெயர்தான் இருந்தது, எனவும், அதை வைத்துக் கொண்டு எப்படி, என் வீட்டிலும், தலைமைச் செயலகத்திலும் சோதனை நடத்தினார்கள் எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், என்னுடைய வீடு மற்றும் தலைமை செயலகத்திற்கு துணை ராணுவ படையினர் ஏன் வந்தனர்? எனக் கேட்டிருந்தார்.
இந்நிலையில், இதுபற்றி சிபிஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமன் கருத்து தெரிவித்த போது “பொதுவாக வருமான வரி சோதனை நடத்தப்படும் போது, அதிகாரிகளுக்கு அந்த இடத்தின் முகவரி மட்டுமே கொடுக்கப்படும். ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு இந்த விதி கூட தெரியவில்லை.
அதேபோல், அப்படி சோதனை நடத்தப்படும் போது, தேவைப்பட்டால், மத்திய போலீஸ் பாதுகாப்பு படையை அதிகாரிகள் கேட்டு பெறலாம். அதற்கு உரிமை உண்டு.
மேலும், தலைமைச் செயலகத்திலும் சோதனை நடத்தவும் அவர்களுக்கு உரிமை உண்டு. அப்போது அங்கு இருந்த முதல் அமைச்சரே அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அவருடைய ஒப்புதலுடனே இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இது எதுவும் தெரியாமல் ராம் மோகன் ராவ் மடத்தனமாக பேசுகிறார்” என அவர் கருத்து தெரிவித்தார்.