மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ரசிகருக்காக ரஜினி பேசி வெளியிட்டுள்ள ஆடியோ வைரலாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் ரஜினிகாந்த் எப்போது கட்சி தொடங்குவார் என அவரது ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வருகிறார்கள். இந்நிலையில் ரஜினியின் அபிமானி ஒருவர் உடல்நலக் குறைவால் மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் ரஜினிக்கு “தங்களை அரியணை ஏற்ற பாடுபடாமல் போகிறேனே என வருத்தமாக இருக்கிறது” என்று கவலையுடன் செய்தி அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு ஆறுதல் சொல்லும் வகையில் ஆடியோ வெளியிட்ட ரஜினிகாந்த் ரசிகரை தைரியமாக இருக்க வலியுறுத்தியுள்ளதோடு, விரைவில் நலம்பெற்று திரும்ப இறைவனை வேண்டிக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் குணமடைந்த பிறகு குடும்பத்தினருடன் தன்னை சந்திக்க வருமாறும் ரசிகருக்கு ஆடியோ மூலமாக அழைப்பு விடுத்துள்ளார்.