நான் நலமாக இருக்கிறேன்.என்னைப் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம் என நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்காவிலிருந்து விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் கபாலி படத்ததை முடித்துக் கொடுத்துவிட்டு, தற்போது குடும்பத்தோடு அமெரிக்கா சென்றுள்ளார்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் அங்கு மரணம் அடைந்துவிட்டதாக இலங்கையைச் சேர்ந்த ஒரு செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது. இதனால் தமிழ் திரையுலகம், ஹாலிவுட், டோலிவுட் தரப்பினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஏராளமான ரசிகர்கள் சென்னை போயஸ்கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டின் முன்பு குவிந்தனர்.
இந்நிலையில், ரஜினிகாந்த் தனது உடல்நிலையை பரிசோதிக்கவே மருத்துவமனை சென்றார் என்றும், அவர் நலமாக இருக்கிறார் என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அவரது குடும்பத்தினர் கேட்டுக் கொண்டனர்.
தற்போது இதுபற்றி நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார். அதில் “ நான். நலமுடன் இருக்கிறேன். ஷங்கரின் 2.0 படத்திற்காக மேக்கப் டெஸ்ட் செய்துகொள்ள அமெரிக்கா சென்றிருந்தேன். அதுமுடிந்த பிறகு என்னுடைய குடும்பத்தினருடன் விடுமுறையை மகிழ்ச்சியாக கொண்டாட நினைத்தேன். ஆனால் அதற்குள் இப்படியெல்லாம் வதந்திகள் பரவி வருகிறது. இது எனக்கு மிகுந்த வேதனையை அளித்துள்ளது. நான் நலமுடன் தான் இருக்கிறேன். என்னைப் பற்றி வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் தேவையற்ற வதந்திகளை கிளப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.
இந்த வதந்தியை முதலில் பரப்பிய இணையதளத்தின் மீது நடவடிக்கை எடுக்க சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் அவர் சென்னை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.