தனியார் நிறுவனங்கள் தயாரித்து விற்பனை செய்யும் பால் பாக்கெட்டுகளில் ரசாயனம் கலந்திருப்பதாகவும், அதனால்தான் குழந்தைகளுக்கு கூட புற்றுநோய் வருகிற என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி “ஆவின் பால் மட்டுமே உடல்நலத்திற்கு சிறந்தது. அந்த பால் தாய்ப்பாலுக்கு நிகரானது. மற்ற தனியார் நிறுவன பால் அனைத்தும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் தன்மையுடயது.
அந்த பால் கெடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, தனியார் நிறுவனங்கள் அதில் ரசாயனத்தை கலக்கின்றன. அதனால் புற்றுநோய் ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு கூட புற்றுநோய் வருவதற்கு தனியார் நிறுவன பாலே காரணம்” என அவர் தெரிவித்தார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் “ பிரிட்ஜில் இருந்து பாலை எடுத்து வெளியே வைத்தால் அடுத்த 5 மணி நேரத்தில் பால் கெட்டுப்போக வேண்டும். அவ்வாறு கெடவில்லை எனில் அது ரசாயனம் கலந்த பால்தான்” என அவர் தெரிவித்தார். மேலும், பாலில் ரசாயணம் கலக்கும் நிறுவனங்கள் விரைவில் களையெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஆனால், அவரின் கருத்திற்கு தனியார் பால் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.