கமலுக்கும் சீமானுக்கும் ஓட்டு போட்டவர்கள் வரலாறு தெரியாதவர்கள் என திமுக எம்பி ஆ.ராசா பேசியுள்ளார்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 96-வது பிறந்தநாள் விழா சமீபத்தில் நடந்தபோது முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கலந்து கொண்டு பேசியதாவது:
இளைஞர்கள் பலர் டார்ச்லைட்டுக்கும், சீமானுக்கும் வாக்களிக்கிறார்கள். அதை பார்த்தால் எனக்கு வருத்தமாக இருக்கிறது. தமிழக அரசியல் வரலாறு அவர்களுக்கு தெரியவில்லை.
தமிழகமெங்கும் பள்ளிகளைத் திறந்து, மாணவர்களுக்கு சத்துணவு போட்டவர் காமராஜர். ’தமிழ்நாடு’ என்ற வார்த்தை சங்க இலக்கியத்தில் இருப்பதாக சுட்டிக் காட்டி, மெட்ராஸ் ஸ்டேட் என்று இருந்ததை தமிழ்நாடு என்று பெயரை மாற்றிய மொழி உணர்வுக்காரர் பேரறிஞர் அண்ணா.
டாக்டர் அம்பேத்கரால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய முடியாத, பெண்களுக்கான உரிமை வழங்கும் சட்டங்களை, கருணாநிதி செய்து காட்டினார்.
எம்.ஜி.ஆர் சினிமாவின் காரணத்தால் மட்டுமே இன்னும் மக்கள் நினைவில் இருக்கிறார். அவரது திட்டங்களால் அல்ல. இன்னும் 25 ஆண்டுகளில் எம்.ஜி.ஆர் மறக்கப்படுவார். ஆனால் வரலாற்றை திருப்பிப் போட்ட மாற்றங்களை செய்தவர்கள் மட்டுமே மக்களால் நினைவில் கொள்ளப்படுவார்கள். பெரியார், அண்ணா, காமராஜர், கருணாநிதி போன்ற தலைவர்கள் செய்த வரலாற்றை மாற்றும் சாதனைகளால், இன்னும் எத்தனை தலைமுறை கடந்தாலும் அவர்கள் போற்றப்படுவார்கள். அதுவே உண்மையான சாதனை. இவ்வாறு ஆ.ராசா பேசினார்