ராகுல் காந்தியை தவிர யாருக்கும் பிரதமராக தகுதியில்லை என்றும் காங்கிரஸ் கட்சி இல்லையென்றால் நாங்கள் ஜீரோ என்றும் ராகுல் காந்தி ஒருவரே ஹீரோ என்றும் புதுவை முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் வெற்றிபெற்ற நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் நேற்று கலந்து கொண்ட முதலமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:
70 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் வளர்ச்சி ஏற்படவில்லை என கூறியும், பாஜக ஆட்சிக்கு வந்தால் 90 நாளிலேயே கறுப்பு பணத்தை ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கில் ரூ.15 லட்சம் பணம் போடப்படும் என தெரிவித்து பிரதமானார் மோடி. ஆனால் இதுவரை ஒருவரின் வங்கிக்கணக்கிலும் 15 பைசா கூட போடவில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கிகளின் முன்பு 169 அப்பாவி ஏழை மக்கள் உயிரிழந்தனர். அதை பற்றி பேச மோடி மறுக்கிறார். கச்சா எண்ணெய் ஒரு பேரல் 70 டாலராக விற்பனை செய்யப்படும் தற்போதைய காலகட்டத்தில் பெட்ரோல் விலை உயர்ந்து ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உள்ளூர் மக்களின் பாதிப்பை கண்டுகொள்வதில்லை.
ரபேல் விமானம் பராமரிக்கிற ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வழங்க இந்தியா தான் பரிந்துரை செய்ததாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் கூறியதற்கு பிரதமர் மோடி வாய் திறக்காமல் மெளனம் காத்து வருகிறார். பாராளுமன்ற குழு விசாரணைக்கு தயாராகவும் இல்லாமல் உள்ளனர்.
கட்சியில் ஒற்றுமை இருக்க வேண்டும். பாகுபாடு கூடாது. காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெல்ல இளைஞர் காங்கிரஸார் பாடுபட வேண்டும். ராகுலை தவிர யாருக்கும் பிரதமராக தகுதியில்லை. காங்கிரஸ் கட்சி இல்லையென்றால் நாங்கள் ஜீரோ. ராகுலே ஹீரோ. புதுச்சேரி மாநிலத்திற்கு ஒரு பெரிய சனியன் பிடித்துள்ளதை நீக்க ராகுல் காந்தியை பிரதமராக்கினால் மட்டுமே முடியும்
இவ்வாறு புதுவை முதல்வர் நாராயணசாமி பேசினார்.