புதுச்சேரி அமைச்சருக்கு கொரோனா: அதிர்ச்சித் தகவல்
தமிழகத்தில் ஏற்கனவே ஒரு சில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர்களுக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது என்பது தெரிந்ததே. மேலும் நேற்று ஒரே நாளில் திருவாடனை தொகுதி எம்எல்ஏ கருணாஸ் மற்றும் பூம்புகார் தொகுதி எம்எல்ஏ பவுன்ராஜ் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று பரவியது என்பதை பார்த்தோம்
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி புதுவை மாநில சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி என்பவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமைச்சருக்கு மட்டுமின்றி அவருடைய இளைய மகன் விக்னேஷ் என்பவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் கந்தசாமி அவர்களின் தாயாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. புதுவை மாநிலத்தில் அமைச்சர் ஒருவருக்கு கொரோனா தொற்று பரவியிருப்பது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
புதுவையில் தற்போது 4433 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், அம்மாநிலத்தில் கொரோனாவில் இருந்து 2668 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது