புதுவை கவர்னர் கிரண்பேடியை கண்டித்து அம்மாநில முதல்வர் நாராயணசாமி 3வது நாளாக தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க புதுவை மத்திய படையினர் குவிந்துள்ளனர். தர்ணா போராட்டம் நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு பலப்படுத்துள்ளது
இந்த நிலையில் மூன்று நாட்களாக தொடர் போராட்டம் செய்து வரும் நாராயணசாமியை பார்க்க வந்த அவரது மகள் விஜயகுமாரியை மத்திய பாதுகாப்பு படையினர் அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த விஜயகுமாரி மறியலில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விஜயகுமாரியின் மறியல் போராட்டத்திற்கு மகளிர் காங்கிரஸ் தொண்டர்களும், திமுக எம்எல்ஏ சிவாவும் ஆதரவு கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் டெல்லியில் இருந்து இன்று புதுவை திரும்பும் ஆளுனர் கிரண்பேடி, முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும், எனவே இன்று மாலைக்குள் தர்ணா போராட்டம் முடிவுக்கு வந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் புதுவை விவகாரம் குறித்து கருத்து கூறிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 'புதுவை அரசியலில் அசாதாரண சூழலை உருவாக்குவதற்கு துணை நிலை ஆளுநரே காரணமாக இருப்பது அரசியல் சட்டத்துக்கு முற்றிலும் விரோதமானது என்றும், ஆளுநர்களை, பாஜக அரசு தங்கள் சொந்தக் கட்சியின் பொதுச்செயலாளர்களாக மாற்றியிருப்பதற்கு இதுவே உதாரணம் என்றும் இதனால் ஆளுநர் பதவி தேவைதானா என்கிற கேள்வியே மீண்டும் எழுகிறது என்றும் கூறியுள்ளார்.