வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழிசை சௌந்தரராஜன் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்கதேசத்தில் கடந்த சில நாட்களாக சிறுபான்மை இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதோடு, அவர்களுடைய சொத்துக்கள் சூறையாடப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில், வங்கதேசத்தில் சிறுபான்மையினராக வாழும் இந்துக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி, இந்து உரிமை மீட்பு இயக்கம் சார்பில் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழிசை சௌந்தரராஜன் உட்பட பலர் கலந்து கொண்ட நிலையில் ஆர்ப்பாட்டம் செய்த அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழிசை சௌந்தரராஜன், கரு நாகராஜன் உட்பட 500 பேர் கைது செய்யப்பட்டதாகவும், அவர்கள் அனைவரும் சுவாமி சிவானந்தா சாலை மற்றும் எழும்பூரில் உள்ள மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.