தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள இந்து மத தலைவர்களை கொல்ல சதி நடப்பதாக உளவுத்துறை அளித்த தகவலின்பேரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில காலமாக கேரளா, தமிழக பகுதிகளில் மதரீதியான மோதல், சர்ச்சைகள் தொடர் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த வாரத்தில் இந்து அமைப்பு முக்கியஸ்தர்கள் வீடுகளில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது கேரளா, தமிழ்நாட்டில் உள்ள இந்து அமைப்பு தலைவர்களை கொல்ல சதி திட்டம் நடப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. கேரளாவில் முக்கிய இந்து அமைப்பு தலைவர்கள் 5 பேர் பட்டியலை கொடுத்து அவர்களது உயிருக்கு ஆபத்து உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதனால் அவர்களுக்கு சிஆர்பிஎஃப் வீரர்களின் ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு வழங்க ஏற்பாடாகியுள்ளது. தமிழகத்திலும் முக்கிய இந்து அமைப்பு தலைவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட ரீதியாக ஆக்டிவாக செயல்பட்டு வரும் இந்து அமைப்பை சேர்ந்த பிரமுகர்கள் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.