பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் வழங்க தனியார் பள்ளிகள் பணம் கேட்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து வரும் கொரோனா பாதிப்புகளால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படாமல் இருந்த சூழலில் தேர்வுகளை ரத்து செய்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் 80 % மதிப்பெண்களும், வருகை பதிவின் அடிப்படையில் 20% மதிப்பெண்களும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண் விவரங்கள், வருகை பதிவேடு விவரங்களை இன்று மாலை 5 மணிக்குள் பள்ளி கல்வி துறையிடம் ஒப்படைக்க அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பத்தாம் வகுப்பில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற 50 ஆயிரம் வரை தனியார் பள்ளிகள் பணம் கேட்பதாக கூறப்படுகிறது.