தமிழ்நாட்டில் தனியார் பால் நிறுவனங்கள் இன்று முதல் பால் பாக்கெட்டுகள் விலையை உயர்த்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டில் பால்பொருட்கள் கொள்முதல் மற்றும் உற்பத்தி விலை அதிகரிப்பு காரணமாக தொடர்ந்து 4 முறை தனியார் பால் நிறுவனங்கள் விலையை உயர்த்தின. அரசு பொதுத்துறை நிறுவனமான ஆவினில் விலை உயர்வு இருந்தாலும், தனியார் நிறுவனங்களை ஒப்பிடுகையில் ரூ.20 குறைவாகவே விற்பனையாகி வருகிறது.
இதனால் ஆவின் பால் பாக்கெட்டுகள் விரைவில் விற்று தீர்கின்றன. இந்நிலையில் விலையேற்றத்தை சமாளிக்க பால் பாக்கெட்டுகள் விலையை உயர்த்துவதாக தனியார் பால் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன்படி பால் மற்றும் தயிர் பாக்கெட்டுகள் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
அதன்படி தனியார் நிறுவனங்களின் சமன்படுத்தப்பட்ட பால் விலை லிட்டருக்கு ரூ.50ல் இருந்து ரூ.52 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் லிட்டருக்கு ரூ.48ல் இருந்து ரூ.50 ஆகவும், கொழுப்பு பால் ரூ.70ல் இருந்து ரூ.72 ஆகவும் உயர்த்தப்படுகிறது. தயில் லிட்டருக்கு ரூ72 ஆக இருந்த நிலையில் ரூ.74 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.