ஆயுள் கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்ய மாநில அளவிலான குழுவின் பரிந்துரை அடிப்படையில் முதலமைச்சர் ஒப்புதல் அளித்த பிறகும், தகுந்த காரணங்களை கூறாமல் ஆளுநர் எப்படி நிராகரிக்க முடியும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பாளையங்கோட்டை சிறையில் உள்ள சங்கர், கோவை சிறையில் உள்ள வேலுமணி உள்ளிட்ட 10 ஆயுள் தண்டனை கைதிகள் சார்பில் முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. தங்கள் மீது கொடுங்குற்றங்கள் இல்லாத காரணத்தால் நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்ய இதற்கென அமைக்கப்பட்ட குழு பரிந்துரைத்தது.
முதலமைச்சரும் அதற்கான அனுமதியை வழங்கினார். ஆனால், ஆளுநர் அதற்கு சரியான காரணம் தெரிவிக்காமல் முன்கூட்டியே விடுதலை செய்ய ஒப்புதல் அளிக்காமல் நிராகரித்துவிட்டதாக மனுவில் சுட்டிக்காட்டினார். எனவே தங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், சிவஞானம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் தரப்பு மற்றும் அரசு தரப்பு வாதங்களைக் கேட்டு நீதிபதிகள், நன்னடத்தை அடிப்படையில் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக மாநில அளவிலான குழு பரிந்துரையின் அடிப்படையில் முதலமைச்சர் ஒப்புதல் அளித்த பின்னரே தக்க காரணங்கள் கூறாமல் ஆளுநர் எப்படி நிராகரிக்க முடியும் என அதிருப்தி தெரிவித்தனர்.
மேலும் தமிழக அரசு இந்த கோப்புகளை 8 வாரத்திற்குள் மீண்டும் மறுபரீசீலிக்க உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.