தமிழக மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி மீனவர்கள் பேரணியாக செல்கின்றனர்.
கடந்த நான்காம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தது. இரண்டு விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தது.
கைதான மீனவர்களில் 20 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள மூன்று பேருக்கு சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. மீனவர் ஒருவருக்கு ஓராண்டு சிறையும், இரண்டு பேருக்கு ஆறு மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்பட்ட சம்பவம் தமிழக மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இலங்கை நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள், ராமேஸ்வரத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக செல்கின்றனர்.
மூன்று நாட்கள் பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்களது அரசு அடையாள அட்டைகளை ஒப்படைக்கத் மீனவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை இலங்கை நீதிமன்றம் உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்றும் பேரணியில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.